ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2022: மகரம் – கே.பி.வித்யாதரன்

மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கி நீங்கள். புரட்சிகரமான எண்ணங்கள் உடைய நீங்கள், மனிதநேயத்தை மழுங்கவைக்கும் மூடச் சிந்தனைகளைத் தூக்கி எறிவீர்கள். உங்களுக்கு 21.03.2022 முதல் 08.10.2023 வரையிலும் ராகுவும், கேதுவும் இணைந்து என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்!

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இழப்பு, ஏமாற்றம், விரக்தி என நாலாபுறமும் வாட்டி வதைத்த ராகு பகவான், இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் வந்து அமர்கிறார். இனி மன நிம்மதியைத் தருவார். பாதியிலேயே நின்றுபோன வேலைகளையெல்லாம் இனி பக்குவமாய் பேசி முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் என மாறி மாறி உங்களை ஏமாற்றினார்களே… இனி அவர்களெல்லாம் உங்களிடம் மன்னிப்புக் கேட்பார்கள். குடும்பத்தில் எதைப் பேசினாலும் கலகம் வெடித்ததே… இனி வீட்டில் அமைதி திரும்பும்.

கே.பி.வித்யாதரன்

கணவன் – மனைவிக்குள் கசப்பு உணர்வு நீங்கும். தாம்பத்தியம் இனிக்கும். அதேநேரம் இருவரும் தங்களின் ரத்த சொந்தங்கள் பற்றி பெருமை பேச வேண்டாம். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியில் வாங்கியிருந்த கடனை தீர்க்க புது வழி பிறக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்றுசேருவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாயாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். இரத்த அழுத்தம், நரம்புக் கோளாறு வரும். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சலும், கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குக் குடிபெயர்வார்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

21.03.2022 முதல் 22.05.2022 வரை: சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் ராகு பகவான் செல்வதால், வாழ்க்கைத் துணைவர் வழியில் மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

23.05.2022 முதல் 29.01.2023 வரை: சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் ராகு செல்வதால் பணத்தட்டுப்பாடு நீங்கும். திருமணம் கூடி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

30.01.2023 முதல் 08.10.2023 வரை: கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு செல்வதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளால் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உணவு, சிமெண்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. கணினித் துறையில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினரைப் பற்றிய வீண்பழி விலகும். பெரிய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் வரும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மகரம்

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து பணப் புழக்கத்தையும், பிரபலங்களின் நட்பையும் ஏற்படுத்திக் கொடுத்த கேது பகவான், இப்போது பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். ஆகவே, எந்த வேலையையும் திறம்பட செய்து முடிக்கும் மனோபலத்தைத் தருவார். அதே நேரம் இரண்டு மூன்று முறை அலைந்து திரிந்து காரியத்தை முடிக்கவேண்டி வரும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள்.

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சொந்த-பந்தங்களுடன் இருந்த நெருடல்கள் நீங்கும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரி பார்ப்பது நல்லது.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்!

21.03.2022 முதல் 24.09.2022 வரை: குருவின் விசாகம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உதவுவார்கள். செல்வாக்கு கூடும். திருமணம் முடியும்.

25.09.2022 முதல் 04.06.2023 வரை: ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது செல்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

04.06.2023 முதல் 08.10.2023 வரை: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் கேது செல்வதால் பங்காளிப் பிரச்னைகள் தீரும்.

வியாபாரத்தில் பெரிய முதலை போட்டு வட்டியும் முதலுமாக எடுத்துவிடலாம் என்று அவசர முடிவுகளை எடுத்துவிடாதீர்கள். இருப்பதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதே சிறந்தது. வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்த புது யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்தியோகத்தில் காலநேரம் இல்லாமல் உழைக்க வேண்டியது வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வைப் போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் உஷாராகப் பழகுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.