பதவி படுத்தும் பாடு… ஸ்டாலின் எச்சரித்தும் அடங்காத ‘தலை’கள்!

DMK dissenters not resigning even though stalin warned to necessary action: திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரை பதவி விலக எச்சரித்துள்ள நிலையிலும், வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக திமுக தலைமை, இந்த பதவிகளில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்கியும், தங்கள் கட்சி சார்பில் யார் இந்த பதவிகளுக்கு போட்டியிடுவார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டது. இதன்படி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்கள் கிட்டதட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

இருப்பினும் ஒரு சில இடங்களில், கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளருக்கு எதிராக, சொந்த கட்சியை சேர்ந்தவர்களே போட்டி வேட்பாளராக களம் இறங்கினர். இது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

இதை விட திமுக தலைமைக்குச் சிக்கலாக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும், திமுகவைச் சேர்ந்தவர்கள், ஒரு சில இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சியினர், திமுக தலைவர் ஸ்டாலினிடம் முறையிட்டனர்.

கட்சி தலைமையின் கட்டுபாட்டை மீறி செயல்பட்ட கவுன்சிலர்கள் மீது கோபமடைந்த ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்றவர்கள், உடனடியாக பதவி விலகி விட்டு, தன்னை வந்து சந்திக்கும்படி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க மறுத்தார் ஜெயலலிதா: அப்போலோ டாக்டர் சாட்சியம்!

இருப்பினும், திமுக தலைவர் எச்சரிக்கை விடுத்து 3 நாட்கள் ஆகியும், வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர். இதனால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட திமுக மாவட்ட தலைமை, மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனாலும் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வென்றவர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்றும், இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், இதுவரை வெற்றி பெற்ற எந்த திமுகவினரும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் திமுக தலைமை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, கூட்டணி கட்சிகள் என்ன செய்ய போகிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.