அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் அவர்களினால் இன்று (08) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் அழைக்கப்பட்ட மற்றும் அதன் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 12 அரசாங்க நிறுவனங்கள் குறித்தே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு, இலங்கை பெற்றோலிய களஞ்சிய மற்றும் விநியோகம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் தற்போதைய நிலைமைகள் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை, இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை, வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வாழும் குடும்பங்களை மீள்குடியேற்றுவது குறித்த கணக்காய்வு அறிக்கை, இலங்கையில் பிளாஸ்டிக் இறக்குமதி மற்றும் பாவனை பற்றிய சுற்றாடல் கணக்காய்வு அறிக்கை, இலங்கை கனியமணல் லிமிடட், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு விஞ்ஞான கற்கை நிறுவனம், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை உள்ளிட்டவை குறித்த விசாரணைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையால் சமர்ப்பிக்கப்பட முடியாத இந்த அறிக்கையை இரண்டாவது கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கு கோப் குழு உறுப்பினர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.