அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் இருக்காது: பகவந்த் மன் ‘நச்’ அறிவிப்பு

மொத்தம் 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், வெற்றி பெறுவதற்கு தேவையான இடங்களை விட
ஆம் ஆத்மி
கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது. பாஜக படுதோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தனிக்கட்சி தொடங்கி பாஜவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டவருமான அமரீந்தர் சிங் தோல்வியடைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் 58,206 வாக்குகள் பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமையவுள்ளது.

இந்த நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள
பகவந்த் மன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறாது எனவும் தனது சொந்த கிராமமான கட்கர்காலனில் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அலுவலகங்களில் இனி முதல்வர் படம் இடம் பெறாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “எனக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எதிராக மற்ற கட்சிகள் ஒவ்வொரு தந்திரங்களையும் பயன்படுத்தினர். தனிப்பட்ட தாக்குதல்களை செய்தார்கள். கேலி செய்தார்கள். ஆனால் மக்கள் அவற்றையெல்லாம் நிராகரித்து எங்கள் மீது நம்பிக்கை காட்டியுள்ளனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சாமானியரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார்.

நகைச்சுவை நடிகரும், அரசியல்வாதியுமான பகவந்த் மன், பஞ்சாபில் உள்ள சங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.