`உண்ணி', `தோசி', `நெடலி' – வெள்ளை கொக்குகளில் இத்தனை வகைகளா? – பறவைகள் சூழ் உலகு – 2

கொக்கு என்பது நம் அனைவருக்கும் மிக பரிச்சயமான பறவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் பறவையாகவும் கொக்கு இருக்கிறது.
`கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’
`கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பது போல’
`கொக்கு இளங் குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை’
`கொக்குக்குண்டா வீர சைவம்?’
`கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சை கொண்டுபோக?’
கொக்கை மையப்படுத்தி மேலே குறிப்பிட்டது போன்ற பல்வேறு சொலவடைகள் நம்மூரில் புழக்கத்தில் உள்ளன என்பது இப்பறவை பல நூறு ஆண்டுகளாக மக்களுடன் இணைந்து வாழ்வது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

என்னுடைய சிறுவயதில் நண்பர்களுடன் சேர்ந்து சாயங்காலம் நேரம் கொக்குகள் பறந்து செல்வதை ரசிப்பதுண்டு, கொக்குகளைப் பார்த்து கைகள் இரண்டையும் மேலே தூக்கி “கொக்கே கொக்கே பூ போடு” என்று கைகளை ஆட்டி ஆட்டி செய்கை செய்வது உண்டு.

பெரிய வெள்ளைக் கொக்கு

பின்னர் அனைவரும் கைகளை ஆர்வமாகப் பார்த்து கொக்கு எனக்கு பூ போட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்வோம். ஆனால், பின்னாளில்தான் தெரிய வந்தது அது பூ இல்லை கொக்கின் எச்சம் என்று. சிங்கம்பட்டி அரண்மணைக்கு வட பகுதியில்தான் எங்கள் வீடு. அரண்மனையில் இருக்கும் வில்வம் மரங்களில் அந்தி வேளையில் கொக்குகள் அடையும். 1990-களில் எங்கள் பகுதியில் தெரு விளக்குகள் கிடையாது, பல வீடுகளில் மின்சாரம் கூட கிடையாது, மின்சாரம் இருந்தால் கூட மஞ்சள் விளக்குகள்தான் பயன்படுத்தப்படும். மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்துவிடும் என்று நன்கு இருட்டிய பின்னர் ஒரு மணி நேரம் மட்டும்தான் அநேக வீடுகளில் மின்விளக்குகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அந்த இரவு நேரத்தில் அரண்மனை வில்வ மரத்தில் வெள்ளை வெளேரென்று டியூப் லைட்டுகள் கட்டி உள்ளது போன்று கொக்குகள் தெரியும். என்ன ஒரு காட்சி அது. இது போன்று ஏதோ ஒரு வகையில் கொக்குகள் உங்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என நம்புகிறேன். இந்தக் கொக்குகளைக் குறித்த விளக்கங்களை பார்க்கலாம்.

நாரை வம்சம்:
நாரை வம்சத்தில் கொக்கு, நாரை, செங்கால் நாரை மற்றும் அரிவாள் மூக்கன் என நான்கு குடும்பங்கள் உள்ளன. நாரை வம்சத்தில் 28 சிற்றினங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
கொக்கினப் பறவைகள் அனைத்தும் நீரைச் சார்ந்து வாழ்பவை. நீர்க்கரைகளின் ஓரத்தில் ஆழம் குறைவான பகுதிகளில் இரைகளைத் தேடுவதால் அதனுடைய கால்கள் நீண்டிருக்கும். கால்களின் முன்பகுதி இறகுகளால் மூடப்பட்டிருக்கும். கழுத்துப் பகுதி நீண்டு வளைந்திருக்கும். இரைகளை கொத்திப்பிடிக்க ஏதுவாகக் கொக்கின் அலகானது ஈட்டி போன்று கூர்மையாக இருக்கும்.
“ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு”
என்ற சொலவடை நம் அனைவரும் அறிந்ததே, மிகவும் அமைதியாகப் பொறுமையாக இரைக்காக காத்திருந்து அவற்றை கொத்திப் பிடிக்கும். கொக்குகள் பகுத்துண்டு வாழ்பவை, மற்றப் பறவைகளுடன் இணைந்தும், தன் கூட்டங்களுடனும் குளங்களில் இரைகள் தேடுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கக் கூடும். இனப்பெருக்கக் காலங்களில் கொக்கினப் பறவைகளில் மென் தூவிகள் காணப்படும். சில பறவைகளில் கூடுதல் வண்ணமும் காணப்படும். வருடம் முழுவதும் நம்மூரில் காணப்படும் 4 வகையான வெள்ளைக் கொக்குகளை இன்று நாம் பார்க்கலாம்.

உண்ணிக் கொக்கு (இனப்பெருக்க பருவம்)

உண்ணிக் கொக்கு, மாட்டுக் கொக்கு (Cattle Egret):

மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகளின் ஊடே கூட்டமாக நின்று பறந்து செல்லும் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். காடுகளில் யானைகள் கூட்டத்தின் நடுவிலும் இவை நின்று பூச்சிகளை வேட்டையாடும். கால்நடைகள் மேல் இப்பறவைகள் சவாரி செய்வது மிக அழகு. தற்போது கால்நடைகள் குறைந்து டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரம் பழக்கத்தில் வந்து விட்டதால் உண்ணிக் கொக்குகள் இந்த இயந்திரங்களை பின் தொடர்ந்தும் இரைகளைத் தேடுகின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் உண்ணிக் கொக்குகளின் பங்கு அளப்பரியது. உழவு மற்றும் அறுவடை சமயங்களில், வயல்வெளிகளில் உண்ணிக் கொக்குகளை அதிகமாகப் பார்க்க முடியும்.
வரையறை: வெண்ணிறப் பறவையின் அலகு மஞ்சள் நிறமானது. இனப்பெருக்கக் காலங்களில் தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
இனப்பெருக்கம்: ஏப்ரல் – ஜுன், கொக்கினப் பறவைகளுடன் சேர்ந்து அடர்ந்த பெரிய மரங்களில் கூடுகட்டும்.

தோசி கொக்கு, சிறு வெண்கொக்கு (Little Egret)
குளங்கள் மற்றும் ஏரிகளில் ஆழம் குறைந்தப் பகுதிகளில் அமைதியாக நின்றுகொண்டும் நடந்தபடியும் இரை தேடும். நீர் வெளியேறும் மடைகளுக்கு அருகிலும் நின்றுகொண்டு மீன்களை வேட்டையாடும்.

தோசி கொக்கு

வரையறை: உடல் மெலிந்தது, வெண்ணிறமானது. அலகு மற்றும் கால்கள் கருமையானவை, பாதங்கள் மஞ்சள் நிறமானவை. கரு நிற கால்களில் பாதங்கள் மஞ்சள் வண்ணத்தில் பளிச்சென்று இருப்பதால் இதை மஞ்சள் களவாணி என்றும் சொல்வார்கள். பறக்கும்போது மஞ்சளை காலில் தூக்கிக்கொண்டு பறப்பதுபோல் தோன்றும். இனப்பெருக்கக் காலங்களில் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் மென்தூவி இறகுகள் காணப்படும்.
இனப்பெருக்கம்: நவம்பர் – பிப்ரவரி, கொக்கினப் பறவைகளுடன் சேர்ந்து கிராமங்களில் உள்ள மரங்களில் இனப்பெருக்கம் நடக்கும்.

நெடலி வெள்ளைக் கொக்கு (Intermediate Egret)
பெரும்பாலும் தனித்து இருக்கும், சதுப்பு நிலங்களில் துழாவியபடி இரை தேடும். உண்ணிக் கொக்கு மற்றும் தோசிக் கொக்கைவிட உருவத்தில் பெரியது.

நெடலி வெள்ளைக் கொக்கு

வரையறை: வெண்ணிறப் பறவை, கருநுனியுடைய மஞ்சள் நிற அலகு மற்றும் கறுப்பு நிறக் கால்கள் கொண்டது. இனப்பெருக்கக் காலத்தின்போது முதுகு மற்றும் நெஞ்சுப்பகுதியில் மென்தூவி இறகுகள் காணப்படும்.

இனப்பெருக்கம்: ஜுலை – பிப்ரவரி, கொக்கினப் பறவைகளுடன் சேர்ந்து மரங்களில் இனப்பெருக்கம் நடக்கும்.

பெரிய வெள்ளைக் கொக்கு (Great Egret)
நீர் நிலைகளில் தாவரங்கள் அற்றப் பகுதிகளில் இரை தேடும். கழுத்து நன்கு நீண்டு வளைந்திருக்கும்.

பெரிய வெள்ளை கொக்கு

வரையறை: பெரிய வெண்ணிற பறவை, மஞ்சள் நிற அலகு மற்றும் கருநிறக் கால்கள் கொண்டது. இனப்பெருக்கக் காலங்களில் அலகு கருநிறமாக மாறிவிடும்.
இனப்பெருக்கம்: ஜுலை – பிப்ரவரி, நீர்நிலைகளின் அருகில் உள்ள மரங்களில் இனப்பெருக்கம் நடக்கும்.

கொக்குகளைக் காப்போம்:
வயல் வெளிகளில் உள்ள பூச்சிகள், தவளைகள் போன்றவற்றைப் பிடித்து தின்னவே கொக்குகள் வயல் வெளிகளுக்கு வருகின்றன. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இவற்றின் பங்கு அளப்பரியது. வயல்களுக்கு வரும் கொக்குகளை வெடி போட்டு துரத்த வேண்டாம். அவை பயிர்களுக்கு ஒருபோதும் சேதம் விளைவிப்பதில்லை. கொக்குகள் தங்குகின்ற மரங்களை வெட்ட வேண்டாம். கொக்குகளின் எச்சத்தைக் காரணமாகச் சொல்லி பல இடங்களில் மரங்களை வெட்டுவது, கொக்குகளை வெடியிட்டு துரத்துவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் உள்ள குளக்கரையில் உள்ள மரங்களில் கொக்குகள் தங்கி வருகின்றன.

மு.மதிவாணன்

அப்பகுதியில் வேன் நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. வேன் உரிமையாளர்கள் மரங்களில் உள்ள கொக்குகளை வெடியிட்டு துரத்துவதாக அங்குள்ள சமூக ஆர்வலர் ஒருவர் எனக்கு தகவல் தந்தார். பல நூறு ஆண்டுகளாகக் கொக்குகள் வாழ்ந்து வந்த பகுதியில் நாம் இன்று வேன் நிறுத்தம் அமைத்து அவற்றைத் துரத்துவது நல்ல பழக்கம் அல்ல. அவற்றோடு இணைந்து வாழக் கற்றுக் கொள்வோம். கூடிவாழும் பண்பையும், பகுத்துண்டு வாழும் குணத்தையும் மற்றும் பொறுமை கடைப்பிடித்தலையும் கொக்குகளிடம் கற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்வோம்.

மு.மதிவாணன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.