உ.பி., பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? : வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது!!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குதொடங்கியது. இதில், 2 முதல் 3 மணி நேரத்துக்குள் எந்தெந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து விடும். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.  இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அடுத்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் முன்னணி நிலவரங்கள் வெளியாகி, இந்த மாநிலங்களில் அடுத்து யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து விடும்.கடந்த 7ம் தேதியுடன் உபி.யில் இறுதிகட்ட தேர்தல் முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் உபி.யில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என்றும், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் பல்வேறு நிறுவன கணிப்புகள் தெரிவித்தன. மணிப்பூரில் பாஜ ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உத்தரகாண்ட், கோவாவில் தொங்கு சட்டபேரவை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.கடந்த 2017 தேர்தலில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிற மற்ற பிற உதிரிக்கட்சிகளை இணைத்து திடீர் திருப்பமாக பாஜ ஆட்சி அமைத்தது. எனவே, இம்முறை எக்காரணம் கொண்டும் ஆட்சியை கோட்டை விட்டு விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இழுபறியாக இருக்கும் என்பதால், அங்கு தேர்தல் முடிவுக்கு பிந்தைய கூட்டணியுடன் ஆட்சியை கைப்பற்றுவதில் காங்கிரஸ் இப்போதே தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.  இதற்காக கோவாவில் தலைநகர் பனாஜியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள பாம்போலிம் கிராமத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தனது அனைத்து வேட்பாளர்களையும் காங்கிரஸ் தங்க வைத்துள்ளது. உத்தரகாண்டிலும் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதே போல பாஜவும் மாநில கட்சிகளுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே, தேர்தல் முடிவுகள் வெளியானதும் உத்தரகாண்ட், கோவாவில் பல்வேறு அரசியல் நாடகங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.மணிப்பூரில் பாஜ ஆட்சியை தக்க வைக்கும் என கணிப்புகள் கூறப்பட்டுள்ளதால், பாஜ அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டு வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் அலுவலகங்கள் எந்த பரபரப்பும் இல்லாமல் காட்சி அளிக்கிறது. மணிப்பூரில் பாஜ மீண்டும் வெற்றி பெற்றாலும், தற்போதைய முதல்வர் பிரேன் சிங்குக்கு எதிரான உட்கட்சி பூசல் பெரிய அளவில் வெடிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தால், காங்கிரசுக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, 5 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.* உத்தர பிரதேசத்தில் பாஜ சாதிக்குமா?மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட  மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு பாஜ வெற்றி பெறும் பட்சத்தில், கடந்த 30 ஆண்டில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய முதல் கட்சி என்ற பெருமையை பாஜ பெறும்.*பர்சேகர் முடிவு என்ன?கோவா முன்னாள் முதல்வரான லட்சுமிகாந்த் பர்சேகருக்கு பாஜ சீட் தர மறுத்ததால் அவர் தனது சொந்த தொகுதியான மந்த்ரமில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2017 தேர்தல் போல் அல்லாமல் இம்முறை நான் என் சொந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். இதில் எனது வெற்றி நிச்சயமாகி உள்ளது’’ என்றார். வெற்றி பெற்ற பின் பாஜ.வில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இந்த அனுமானத்திற்கு இப்போது பதில் சொல்ல முடியாது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.