அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!!

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை என்னும் ஊரில் அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது.   கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள கரமனை என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.  இக் கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

அருள்மிகு தர்ம சாஸ்தா திருக்கோயிலில் மூலவரின் விமானம் சிலந்தி வலை போன்று கூம்பு வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு.  இத்தலத்தின் கருவறையைச் சுற்றி நான்கு புறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவர்களின் நடுவில் பலகணி (ஜன்னல்) வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுவாமிக்கு நேர் எதிரில் மட்டுமல்லாது, பலகணிகளின் வழியாகவும் இத்திருக்கோயிலில் சுவாமியை தரிசிக்கலாம்.  திருவனந்தபுரத்தில் பல சாஸ்தா கோயில்கள் இருந்தாலும், மிக பழமையான சாஸ்தா கோயில் இதுதான். எனவே இத்தலத்தில் உள்ள மூலவருக்கு ஆதி சாஸ்தா என்ற பெயரும் உள்ளது.

திருவனந்தபுரம் சுற்றுப்புறத்தை சேர்ந்த பக்தர்களும், காமனையைச் சேர்ந்தவர்களும் இத்தலத்தை சபரிமலையாகவே கருதி அவரவர் வீட்டில் இருமுடி கட்டி கொண்டு இந்த கோயிலுக்கு சென்று நெய் அபிஷேகம் செய்கின்றனர்.

எல்லா மலையாள மாத பிறப்பு நாட்களிலும், முக்கிய விழா நாட்களிலும் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும்.  இப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்வோர், சாஸ்தாவுக்கு தான் முதல் பத்திரிகை வைக்கின்றனர்.

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயிலின் அரசமரத்தடியில் சிவலிங்கமும், நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் மண்டல பூஜை செய்தும், 41ஆம் நாள் கரமனை ஆற்றில் ஆராட்டு விழாவும் சிறப்பாக நடைபெறும்.

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சாஸ்தாவை வழிபடுகின்றனர்.   இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் இருமுடி கட்டி கொண்டு மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.