உக்ரைன் கோரிக்கைகளை ரஷியா ஏற்க மறுப்பு- பேச்சு தோல்வி அடைந்ததால் கீவ் நகரில் தாக்குதல் தீவிரம்

கீவ்:

உக்ரைன் மீதான ரஷிய ராணுவத்தின் தாக்குதல் இன்று 16-வது நாளாக நீடிக்கிறது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.

உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. அதேபோல் அந்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் உள்ளது. ஆனால் தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை ரஷிய படையால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை.

ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். இதனால் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷியா அதிகப்படுத்தியபடியே இருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தாலும், அதையும் மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.

இதனால் உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் இடைவிடாமல் தொடர்ந்தபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்து வந்தாலும் மறுபுறம் ரஷியா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு நாடுகளின் குழுவினர் 3 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே இருநாடுகளின் உயர்மட்ட குழுவான வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேற்று துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை உடனே ரஷியா நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ரஷியா ஏற்க மறுத்துவிட்டது.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறும்போது, ‘‘ரஷியாவுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தாக்குதலை நிறுத்தும்படி விடுத்த கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை’’ என்றார்.

அதேபோல் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெர்சி லேவ்ரோ கூறும்போது, ‘‘போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை’’ என்று தெரிவித்தார். ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்ததை அடுத்து ரஷியாவின் தாக்குதல் இன்றும் தீவிரம் அடைந்துள்ளது.

குறிப்பாக தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷியா அதிகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்நகரை பிடிக்க வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து ரஷியாவின் பெரும் படை அணிவகுத்து முன்னேறி வந்தது. நேற்று முன்தினம் கீவ் நகரை ரஷிய படைகள் மிகவும் நெருங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தலைநகர் கீவ்வை ரஷிய படைகள் நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கீவ்வின் புறநகர் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ரஷிய படைகள், நகருக்குள் நுழைய முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுக்க உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கீவ் நகருக்குள் நுழைய முயன்ற சில ரஷிய டாங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த டாங்கிகள் திரும்பிச் சென்றன. இந்த தாக்குதலில் ரஷியாவின் ஒரு டாங்கி மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

இதற்கிடையே கீவ் நகருக்கு வெளியே ரஷிய படைகள் பிரிந்து நாலா புறமும் செல்லும் செயற்கைக்கோள் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படைப்பிரிவினர் காட்டுக்குள் நுழைந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துறைமுக நகரமான மரியுபோலில் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. அங்கு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குண்டுகள் வீசப்படுவதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘‘கடந்த 2 நாட்களில் உக்ரைனில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.