புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவலர்கள் குடும்பத்தினருக்கு வழிகாட்ட தலைமைக் காவலர் லீலாஸ்ரீ நியமனம்

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு உதவிகள், ஆலோசனைகள் வழங்கி வழிகாட்ட பெண் தலைமைக் காவலர் லீலா நியமிக்கப்பட்டுள்ளார்.

பணி காரணமாக காவல் துறையினர் சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாத நிலை மற்றும் உடல்நலனை கவனித்துக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. இதன் விளைவாக, அவர்கள் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதற்கிடையில், சமீபகாலமாக காவல் துறையினர்மற்றும் அவர்களது குடும்பத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அவர்களுக்காக முதல்முறையாக புற்றுநோய்க்கான இலவச மருத்துவ பரிசோதனை, மருத்துவ சிகிச்சை முகாம் கடந்த 2-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக காவல் துறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யவும், வழிகாட்டவும் பெரியமேடு காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் லீலாஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயில்வேயில் பணியாற்றிய இவரது கணவர் புற்றுநோயால் காலமானார். அடுத்த 6 மாதத்தில்லீலாஸ்ரீயின் தாயாரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவரை நீண்ட காலமாக உடன் இருந்து கவனித்து வந்தவர் லீலாஸ்ரீ. இதனால், புற்றுநோயின் கொடுமை, அதனால் ஏற்படும் மன அழுத்தம், பாதிப்பு குறித்து அவருக்கு நன்கு தெரியும். எனவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள், தேவையான ஆலோசனைகளை வழங்கும் வழிகாட்டியாக லீலாஸ்ரீ இருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளையாட்டு வீரரான லீலாஸ்ரீ, கடந்த 7-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவரின் சடலத்தை சற்றும் தாமதிக்காமல் சக காவலருடன் இணைந்து தூக்கி, ஆம்புலன்ஸ் மூலம் சொந்தஊருக்கு அனுப்பி வைத்தார். இதற்காக அவரை சென்னை காவல்ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.