ரஷ்யாவை 'பயங்கரவாத நாடு' முத்திரை குத்திய ஜெலென்ஸ்கி., புதிதாக 3 உக்ரைன் நகரங்களில் தாக்குதல்..



உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை “பயங்கரவாத” நாடு என்று முத்திரை குத்திய பிறகு, ரஷ்யா முதல் முறையாக மூன்று புதிய நகரங்களை குறிவைத்து உக்ரைன் மீதான தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போரின் 16-ஆம் நாளான இன்று, அதிகாலையில் தென்கிழக்கில் டினிப்ரோ (Dnipro) மற்றும் மேற்கில் லுட்ஸ்க் (Lutsk) மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) ஆகிய 3 நகரங்களில் புடின் படையினர் தாக்குதல் நடத்தினர்.

ரஷ்ய துருப்புக்கள் லுட்ஸ்க் மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் உள்ள இரண்டு இராணுவ விமானநிலையங்கள் மீது மிகத் துல்லியமான, நீண்ட தூரத் தாக்குதலைத் தொடுத்து, அங்கிருந்து பதில் தாக்குதல் நடத்தமுடியாதபடி செய்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா மேலும் உக்ரேனில் “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று பெயரில் இதுவரை 3,213 உக்ரேனிய இராணுவ நிறுவல்களை அழித்ததாகவும் அவர் கூறினார்.

உக்ரைன் எம்பி Inna Sovsun, இவானோ-பிராங்கிவ்ஸ்கில் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பெரும் புகை மூட்டம் எழும் வீடியோ காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து புகைப்படங்களையும் பகிர்ந்துவருகிறார்.

மத்திய உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் ஒரு மழலையர் பள்ளி மற்றும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகில் மூன்று வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாக மாநில அவசர சேவைகள் தெரிவித்தன.

வடக்கு நகரமான செர்னிஹிவ் மீது உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எம்பி சோவ்சுன் கூறினார். நகருக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உக்ரைனின் துறைமுக நகரமான Mariupol-ல் 400,000 மக்களை நீர், உணவு, வெப்பம், மின்சாரம் இல்லாமல் 10 நாட்களாக பெருந்துயரத்தில் ஆழ்த்திதற்காக, நேற்று ஜனாதிபதி Zelensky ரஷ்யாவை “பயங்கரவாத நாடு” என்று குற்றம் சாட்டி விமர்சித்தார்.

மரியுபோல் நகரம் கடந்த 10 நாட்களாக கடும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது, பொதுமக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழியின்றி பலமுறை போர் நிறுத்தங்களுக்கு ஒப்புக்கொண்ட போதிலும் ரஷ்யா தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.