உக்ரைனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆர்எஸ்எஸ் கிளை, ஆன்மீக அமைப்புகள்: இந்திய தூதரகங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு உதவி

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஐரோப்பிய கிளையும் ஆன்மீக அமைப்புகளும் இறங்கியுள்ளன. இந்த அமைப்புகள் அண்டை நாடுகளில் இந்திய தூதரகங்களுடன் இணைந்து இந்திய மாணவர்களுக்கு சேவை புரிகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் அங்கு பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டது. இவர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் ‘ஆபரேஷன் கங்கா’ என்ற மீட்புப் பணி தொடங்கப்பட்டது. இப்பணியை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடு களுக்குச் சென்றனர்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 24-ல் தொடங்கிய மீட்புப் பணியில் உக்ரைனை சுற்றியுள்ள பல்வேறு நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன் இந்திய மாணவர் களை ஒன்றுதிரட்டும் பணியில் சேவா இன்டெர்நேஷனல் அமைப் பினரும் இறங்கினர்.

156 நாடுகளில் கிளை

பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் (ஆர்எஸ்எஸ்) சர்வதேச கிளை யாக இந்து ஸ்வயம்சேவக் சங் (எச்எஸ்எஸ்) செயல்படுகிறது. கடந்த 1940-ல் கென்யாவில் தொடங்கி, தற்போது 3,289 கிளைகளுடன் 156 நாடுகளில் இது செயல்படுகிறது. இதன் புதிய கிளையாக ஐரோப்பாவில் ‘சேவா இன்டெர்நேஷனல்’ உருவாக் கப்பட்டுள்ளது.

இதன் சார்பில் சுமார் 250 தொண்டர்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே, இந்திய மாணவர்களை 24 மணி நேரமும் மீட்க உதவுகின்றனர்.

இதில் பாகிஸ்தானிய மாணவர்கள் கேட்ட உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலந்தில் 12 பேர், ஹங்கேரியில் 9 பேர், ருமேனியாவில் 11 பேர் என நேரிலும் சென்றுள்ளனர்.

இவர்களில் சேவா இன்டெர்நேஷனல் ஜெர்மனி கிளையின் தொண்டர் பிரகாஷ் நாராயணன் என்பவரும் ஒருவர் ஆவார். கேரளாவை சேர்ந்த இவர், ஹைடில்பர்க்கில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் 4 நாள் விடுப்பில் போலந்து சென்று, தனது சொந்த செலவில் தங்கி உதவியுள்ளார்.

இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழிடம் பிரகாஷ் நாராயணன் கூறும்போது, “தொடக்கத்தில் எங்கள் வாட்ஸ்அப் குழுவில் ஒரு நிமிடத்துக்கு சுமார் 5 பேர் என உதவி கேட்டு பதிவிட்டனர். இவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் பாதுகாப்பான இடத்தை முதலில் உறுதி செய்தோம். பிறகு அவர்களை மீட்க, அவர்களின் எண்களில் பேசி உறுதிசெய்த பின், நமது தூதரகங்களுடன் இணைத்தோம். பிறகு அவர்களுக்கு பேருந்துகள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட உதவிகளை எங்கள் தொடர்புகள் மூலம் ஏற்பாடு செய்தோம்.

இந்திய குழுவுடன்…

பிரதமர் மோடியால் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்ட 4 மத்திய அமைச்சர்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினோம். இதில் இந்தியர்களுடன், பாகிஸ்தானியர் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாட்டினரும் பலன் அடைந்தனர். உக்ரைனில் இருந்து இந்தியக் கொடியுடன் எல்லைகளை அடைந்த ஒரே நாட்டினராக இந்தியர்கள் இருந்தனர்.

போர் நகரங்களில் சிக்கிய இவர்களை மீட்க, பிரதமர் மோடி ஒரே நாளில் உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பேசியது பெரும் பலன் அளித்தது. இதுபோல் மற்ற எந்த நாட்டின் தலைவரும் போர் நேரத்தில் இரு அதிபர்களுடன் பேசத் துணியவில்லை என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்” என்றார்.

சேவா இன்டெர்நேஷனல் தொண்டர்கள் மட்டுமின்றி, இந்தியஆன்மீக அமைப்புகளின் கிளைகளை சேர்ந்தவர்களும் இந்தியர்களுக்கு உதவி புரிந்தனர். இவர்களில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, மாதா அமிர்தானந்தமயி மடத்தினர், சுவாமி நாராயண் கோயில் உறுப்பினர்கள் மற்றும் இஸ்கான் அமைப்பின் கிருஷ்ண பக்தர்களும் உக்ரைன் எல்லைகளில் முகாம் அமைத்துள்ளனர். இவர்கள் தங்கள் அமைப்பு சார்பில் இந்தியர்களுக்கு உணவு, குளிருக்கான உடைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக அளிக்கின்றனர்.

தற்போது பெரும்பான்மையாக, சுமார் 18,000 மாணவர்கள் இந்தியா திரும்பிவிட்டனர். எனவேஎல்லைகளில் மேலும் ஓரிரு நாட்கள் மட்டும் இவர்கள் தங்கள் முகாம்களை தொடர உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.