ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா… `பாகுபலி' பிரபாஸா இது?

காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில், ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள். என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ஒன்லைன்.

1970-களில் பதவி வகித்த அந்த இந்தியப் பெண் பிரதமரிடம் சென்று, அவரின் கை ரேகையை பார்த்து ‘நீங்கள் எமர்ஜென்சி அறிவிக்கப்போகிறீர்கள்’ என்று முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு செல்வாக்குப் பெற்ற கை ரேகை ஜோஷியர் விக்ரமாதித்யா என்கிற ஆதித்யா. ஒருவரின் கை ரேகையை வைத்து, அவர் ஆணா பெண்ணா, எப்படி இறந்திருப்பார், இறக்கும் பொழுது கர்ப்பமா இருந்திருக்கக்கூடுமா, அவர் வீட்டு ரேஷனில் எத்தனை கிலோ சர்க்கரை வாங்கியிருப்பார் என்பது வரை சொல்லும் பலே கில்லாடி.

ராதே ஷ்யாம் விமர்சனம்

பரமஹம்ஸாவின் சீடரான ஆதித்யாவுக்கு காதல் ரேகை இல்லாததால், கல்யாணம் செய்யாமல், ரிலேசன்ஷிப்புக்குள் செல்லாமல் தவிர்த்து வருகிறார். மருத்துவரான பிரேர்னாவுக்கு இன்னும் சில மாதங்களில் இறந்து போகக்கூடிய குணப்படுத்த முடியாத நோய். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் எட்டிப்பார்த்தாலும், காதல் ரேகை தனக்கு இல்லாததால் பிரிய முடிவு செய்கிறார் ஆதித்யா. மருத்துவரான பிரேர்னாவுக்கும் நிறைய சிக்கல்கள். ஆனால், ஆதித்யா பிரிய நினைப்பதற்கான உண்மையான காரணம் என்ன? இறுதியில் என்ன ஆகிறது? காதல் காலத்தை வென்றதா என்பதை பிரமாண்டமாய், 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் காசை வாரி இறைத்து சொல்கிறது ‘ராதே ஷ்யாம்’.

படத்தின் பெரும் பலம் அதன் டெக்னிக்கல் டீம். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் எல்லா பாடல்களும் ஏற்கெனவே ஹிட். யுவனின் குரலில் வரும் ‘யாரோ யார் இவளோ’; சித் ஸ்ரீராமின் குரலில் ‘திரையோடு தூரிகை’ இரண்டும் ஆத்மார்த்தமான மெலடிகள். மதன் கார்க்கியின் வரிகளும் ஜஸ்டினின் இசையும், பின்னணி பாடகர்களின் குரலும் என எல்லாமே பொருந்தி வந்திருக்கின்றன. அயல்நாட்டில் நடக்கும் பீரியட் பிலிம் என்பதால் நிறைய காட்சிகள் ஓவியம் போல இருக்கின்றன. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், ரவிந்தரின் கலை அமைப்பும் படத்தை இன்னும் அழகாக்கியிருக்கின்றன. க்ளைமேக்ஸில் வரும் கப்பல் சாகசக் காட்சிகளின் மேக்கிங் சிறப்பு!

ராதே ஷ்யாம் விமர்சனம்

செய்ரோ என்னும் கை ரேகை ஜோதிடரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராதா கிருஷ்ணா குமார். டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கும் ஒரு படம், சுவாரஸ்யமற்ற திரைக்கதையாலும், நம்ப முடியாத காட்சி அமைப்புகளாலும் நம்மை ஈர்க்க மறுக்கின்றன.

ஆதித்யாவாக பாகுபலி பிரபாஸும், பிரேர்னாவாக பூஜா ஹெக்டேவும் நடித்திருக்கிறார்கள். காதல் காட்சிகள் கொட்டிக்கிடக்கும் படத்தில் பிரபாஸுக்குப் போடப்பட்டிருக்கும் மேக்கப்பே அவ்வளவு அந்நியப்பட்டுப்போய் நிற்கிறது. கை ரேகை ஜோதிடமே 100% உண்மை என நம்பும் மனிதர் ஆதித்யா. அது 99% தான், மீதி ஒரு சதவிகிதம் மனித சிந்தனை என நம்பும் அவரின் குரு பரமஹம்சாவாக சத்யராஜ். பிரியதர்ஷி இருந்தாலும் அவரை ஓரங்கட்டி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் ஜெயராம். பயங்கர வில்லன் பில்டப்புடன் அறிமுகமாகும் ஜகபதி பாபு படத்தில் எதற்கென்று யாருக்குமே தெரியவில்லை.

ராதே ஷ்யாம் விமர்சனம்

ஜோசியம், ஜாதகம் எல்லாம் 100% சரி, தவறு என்னும் வாதத்துக்குக்குள் எல்லாம் செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அதை அறிவியல் என்று நிறுவுவதும், ரேகைதான் எல்லாம், மத்ததெல்லாம் சும்மா என நிறுவவதும் உள்ளபடியே ஆபத்தானது. ஆந்த ஆபத்தான அபத்தத்தை படம் முழுவதும் தூவிச் செல்கிறார் இயக்குநர். ரயிலில் இருக்கும் எல்லோருக்கும் ஆயுள் ரேகை இன்றுடன் முடிகிறது, அதனால் அது விபத்தில் சிக்கும் என்பதில் ஆரம்பித்து அத்தனை பெரும் பிழைகள்.

மறுஜென்மம் முதல் பல ஃபேன்டஸி கதைகளைத் திரையில் பார்த்து ரசிக்கவே செய்திருக்கிறோம். ஆனால், இருக்கும் ஒன்றை (ஜோசியம்) எடுத்துக்கொண்டு அதை நூறு சதவிகிதம் உண்மை என ஓர் அறிவியலாக நிறுவ முயல்வதுதான் பிரச்னையே! அப்படிச் செய்வதை விவாதம் செய்து அரை மனதாக ஏற்றுக் கொண்டாலும், அது நம்பும்படியாகவும் இல்லை என்பதுதான் அதைவிட பிரச்னை. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் சினிமா, சுவாரஸ்யமில்லாத நம்பமுடியாத காட்சிகளால் ஒரு கட்டத்துக்கு மேல் அதில் ஆர்வம் எழாதவாறு பார்த்துக்கொள்கிறது. Eternal Sunshine of the Spotless Mind, La La Land படங்களை நினைவூட்டும் மீட்டுருவாக்கக் காட்சி அமைப்புகள் வேறு அடிக்கடி வந்து போகின்றன.

ராதே ஷ்யாம் விமர்சனம்

டெக்னிக்கலாக நன்றாக இருக்கும் படத்துக்கு, இன்னும் கொஞ்சமேனும் சுவாரஸ்யமான கதையை எழுதி இயக்கியிருந்தால் ராதே ஷ்யாமின் ஆயுள் ரேகை நிச்சயம் நன்றாக இருந்திருக்கும். அதன் பயணமும் எந்தப் பார்வையாளரும் கணிக்க முடியாத சாகசமாக இருந்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.