உக்ரைன் – ரஷ்யா போர்: மீண்டும் நோ ஃப்ளை ஜோன் கோரிக்கையை கையிலெடுத்த ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நோ ஃப்ளை ஜோன் கோரிக்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இன்று 19 நாட்கள் ஆகின்றன. உலக நாடுகள் பலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு ரஷ்யாவுக்கு வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்றிரவு ரஷ்யா உக்ரைனின் ராணுவத் தளம் உள்ளிட்ட பல பகுதிகளையும் குறிவைத்து கடும் தாக்குதல் நடத்தியது.
இதில், 35 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 134 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இரவோடு இரவாக ஜெலன்ஸ்கி தனது நோ ஃப்ளை ஜோன் கோரிக்கைக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

இது தொடர்பாக நேற்றிரவு பேசிய ஜெலன்ஸ்கி, “ரஷ்யப் படைகளின் ஏவுகணைகள் உக்ரைனுக்கு மேற்கே போலந்து எல்லைக்கு மிகமிக அருகில் விழுந்துள்ளது. இது நேட்டோவுக்கு ஒரு எச்சரிக்கை. நேட்டோ உறுப்பு நாடுகளையும் ரஷ்யா குறிவைக்கும் முன்னர் உக்ரைன் வான்பரப்பை நோ ஃப்ளை ஜோனாக அறிவியுங்கள்” என்று கூறினார்.

போலந்து எல்லை அருகேயான ரஷ்ய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆன்ந்தணி பிளின்கன் தனது ட்விட்டர் பக்கத்தில், “போலந்து எல்லை அருகே உள்ள சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக் குழுவின் மையத்தின் மீது ரஷ்ய கூட்டமைப்பின் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கொடூர தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் உக்ரைன் ராணுவ அமைச்சர் இன்று காலை அளித்தப் பேட்டியில், “ரஷ்யப் படைகள் புதிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளன. இத்தாக்குதல் கார்கிவ், சுமி, கீவ் மற்றும் ப்ரோவாரியின் புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்படும். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறி ரஷ்யா உக்ரைன் மக்களின் குடியிருப்புகள் மீது குண்டு மழை பொழிகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

இன்று 4 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை: உக்ரைன் ரஷ்யா இடையே இன்று 4ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை நேருக்கு நேர் சந்தித்துப் பேச உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்துள்ளார். தனது பேச்சுவார்த்தைக் குழுவினர் இந்த சந்திப்பிற்காகப் முயன்று வருவதாகக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.