கல்வி விவகாரங்களில் வரம்பை மீறுகிறாரா ஆளுநர் ரவி?! – குற்றச்சாட்டுகளும் நிலவரமும்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மார்ச் 11-ம் தேதி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, “கல்வி, தனித்து இருக்க வேண்டியதில்லை. தேசிய அளவில் கல்வி இருக்க வேண்டும். எனவே, உயர் கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்“ என்று ஆளுநர் பேசியிருக்கிறார்.

ரவி

தமிழக அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ரவி இருக்கிறார். அந்த வகையில், இதற்கு முன்பு தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர், தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று பேசியதாக செய்திகள் வெளிவந்தன. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தொடர்ச்சியாகக் கூறிவரும் தி.மு.க அரசு, தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான், மாநில அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

தென் மண்டல துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஆளுநர் பேசியிருக்கும் கருத்துகள் கடும் விமர்னத்துக்கு ஆளாகியிருக்கின்றன. இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

“ஒவ்வொரு மாநிலமும் தனக்கான ஒரு கல்விக் கொள்கையை வைத்துள்ளது. பொதுப்பள்ளிகள் எதையும் மத்திய அரசு நடத்தவில்லை. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிப் பள்ளிகள் ஆகிய சிறப்புப் பள்ளிகளைத்தான் மத்திய அரசு நடத்துகிறது. பொதுப்பள்ளிகளை அந்தந்த மாநில அரசுகள்தான் நடத்துகின்றன. அதேபோல, ஐ.ஐ.டி உள்ளிட்ட சில உயர் கல்வி நிறுவனங்களை மட்டுமே மத்திய அரசு நடத்துகிறது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

பெரும்பகுதியான உயர் கல்வி நிறுவனங்களை மாநில அரசுகள்தான் நடத்துகின்றன. உதாரணமாக, தமிழகத்தில் 19 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் மாநில மக்களுக்காக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டவை. இந்தப் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் மாநில அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. அப்படியிருக்கும்போது உயர் கல்வியை மாற்றியமைக்க வேண்டும், ஒழுங்கபடுத்த வேண்டும் என்றெல்லாம் ஆளுநர் சொல்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர், அந்த அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், கூட்டாட்சித் தத்துவத்துக்கு மதிப்பளிக்காமல் பிரசாரம் செய்கிறாரா, செயல்படுகிறரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இளங்கலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு வைக்கப்படும் என்று தேசிய கல்விக்கொள்கை சொல்கிறது. மேலும், இளங்கலைப் பட்டப்படிப்பு மூன்றாண்டு என்பது நான்கு ஆண்டுகள் என மாற்றப்படும் என்று சொல்கிறது. முதலாம் ஆண்டில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான், இரண்டாம் ஆண்டு வகுப்புக்குப் போக முடியும். இதனால், பல சிக்கல்கள் உருவாகும். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெரும் பகுதி மாணவர்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டு, குறைவான மாணவர்களைப் போட்டியாளர்களாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்.

தேசிய கல்விக்கொள்கை

குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே உயர் கல்வியிலும், உயர் பதவிகளிலும் இருக்கும் வகையில் செய்யப்படும் சூழ்ச்சியாக இதைப் பார்க்கிறோம். அப்படியான ஒரு சூழலை உருவாக்குவதற்கான கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துங்கள் என்று ஆளுநர் சொல்வது நியாயமான அணுகுமுறையா என்று கேட்கிறோம்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

“பொதுப்பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில், தகுதிவாய்ந்த கல்வியை மாணவர்களுக்கு முறையாக எப்படி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை தேசிய கல்விக்கொள்கை கோடிட்டு காண்பிக்கிறது. என்ன சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று அல்லாமல், எப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று அது சொல்கிறது. பொதுப்பட்டியலில் இருந்தாலும், அந்தந்த மாநிலங்களில் தாய்மொழிவழியில் கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று அது சொல்கிறது.

நாராயணன் திருப்பதி

அந்தந்த மாநிலங்கள்தான் பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொள்கின்றன. அதில், மத்திய அரசு தலையிடுவதில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், கல்வியின் தரம், கல்வி கற்றுக்கொடுக்கும் முறை, கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கல்வி நிறுவனங்கள் செயல்படும் முறை, இவை அனைத்தையும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதால் தமிழக அரசு அதை எதிர்க்கிறது. மேலும், கல்வியை வைத்து சம்பாதிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களும் தேசிய கல்விக்கொள்கையைக் கண்டு அச்சப்படுகிறார்கள். ஆகவேதான், மாநிலத்தின் மீதும் மாநில மக்களின் மீதும் அக்கறைக் கொண்டிருக்கும் ஆளுநர், தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது, சிலர் அதை விமர்சிக்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்றுகளை கொடுத்தது யார்? அதேபோல, தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கி, அந்தக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்காதவர்கள் யார்? அவர்கள் அனைவரும் தமிழக அரசியல்வாதிகள். தமிழகத்தில் இந்த அரசியல்வாதிகளின் மேற்பார்வையில்தான் கல்வி வியாபாரம் நடைபெற்றுவருகிறது என்பது வெளிப்படையான ஒன்று.

ரவி

இதைக் களைய வேண்டும் என்பதற்காகவும், தமிழக மாணவர்களுக்கு சமமான வாய்ப்பும் தரமான கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் தேசிய கல்விக்கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அதே அக்கறையுடன் ஆளுநரும் பேசுகிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? கல்வியின் மூலமாக தாங்கள் ஈட்டும் வருமானம் பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆளுநரின் கருத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள்” என்கிறார் நாராயணன் திருப்பதி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.