`சஸ்பெண்ட்' ஆன அதிமுக கவுன்சிலர்கள்; திமுக-வுக்கு தூதுவிடும் சேர்மன்! – குமாரபாளையம் பாலிடிக்ஸ்

தி.மு.க, அ.தி.மு.க, சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவோடு குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்றிய சுயேச்சை நகர்மன்றத் தலைவர் விஜய்கண்ணன், தி.மு.க-வில் இணைவதற்கு காய்நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு ஆதரவு கொடுத்த மூன்று அ.தி.மு.க கவுன்சிலர்கள், அவர்களின் கணவர்கள், அ.தி.மு.க நகரச் செயலாளர் என 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய்கண்ணன்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 14, அ.தி.மு.க 10, சுயேச்சை 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 17 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால், தி.மு.க, அ.தி.மு.க என யாருக்கும் தனி மெஜாரிட்டி இல்லாமல் போனது. இதனால், இரண்டு கட்சிகளும் சுயேச்சைகளை ‘வளைக்க’ முயன்றதாக சொல்லப்பட்டது. ஆனால், 31-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற விஜய்கண்ணன் என்பவர், 17 கவுன்சிலர்களை வளைத்து, குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்றி, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில், அவருக்கு ஆதரவு கொடுத்த மூன்று அ.தி.மு.க கவுன்சிலர்களை அந்தக் கட்சித் தலைமை கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறது. ஆனால், விஜய்கண்ணனுக்கு ஆதரவு கொடுத்த 7 தி.மு.க கவுன்சிலர்கள் மீது, தி.மு.க தலைமை நடவடிக்கை எதுவும் எடுக்காததால், விஜய்கண்ணன் தி.மு.க-வுக்கு வருவது உறுதி என்று தி.மு.க-வினர் கிசுகிசுக்கிறார்கள்.

தங்கமணி

குமாரபாளையம் நகராட்சி அதிரிபுதிரி பாலிடிக்ஸ் குறித்து விசாரித்தோம். “குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியாகவும், நகராட்சியாகவும் உள்ளது. குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வாக, அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி இருந்து வருகிறார். அவர் தொகுதியில் வரும் குமாரபாளையத்தை அ.தி.மு.க வசமாக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், குமாரபாளையம் நகராட்சியில் 10 இடங்களில்தான் அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதேபோல், தி.மு.க-வும் 14 வார்டுகளைதான் கைப்பற்றியது. குமாரபாளையத்தில் ஜெயித்த 9 சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவை பெற இருதரப்பும் முட்டிமோதின. ஆனால், அதற்குள் 31-வது வார்டில் சுயேச்சையாக வெற்றிப்பெற்ற விஜய்கண்ணன், சுயேச்சை கவுன்சிலர்கள் 7 பேர், தி.மு.க கவுன்சிலர்கள் 7 பேர், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர் என்று மொத்தம் 17 கவுன்சிலர்களை வளைத்தார்.

ஆளுக்கு தகுந்தமாதிரி, ரூ. 25 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை கொடுத்து, அவர்களை சென்னை, ஏற்காடு அழைத்துபோய் தனது கண் அசைவில் வைத்துக்கொண்டதாக சொல்லப்பட்டது.

இதனால், தங்கமணியும், தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தியும், ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. அதாவது, விஜய்கண்ணன் அழைத்து போன அ.தி.மு.க கவுன்சிலர்கள் மூன்று பேரையும் அழைத்து வருவதோடு, அவர்களையும் சேர்த்து மொத்தமுள்ள 10 அ.தி.மு.க கவுன்சிலர்களை தி.மு.க-வுக்கு ஆதரவு தர வைக்கிறேன் என்று தங்கமணி உத்தரவாதம் கொடுத்தாராம். அதற்கு கைமாறாக, அ.தி.மு.க-வுக்கு துணைத் தலைவர் பதவியை தந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம். கே.எஸ்.மூர்த்தியும் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும் பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையில், மீதமுள்ள ஒரு சுயேச்சை வேட்பாளர் தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தார். இதனால், தி.மு.க தரப்பில் 8-வது வார்டில் வென்ற கவுன்சிலர் சத்தியசீலன் என்பவரை நகராட்சித் தலைவர் வேட்பாளராக அறிவித்தனர். ஆனால், தங்கமணி தரப்பால், விஜய்கண்ணன் கஸ்டடியில் இருந்த அ.தி.மு.க கவுன்சிலர்களை நெருங்கவே முடியவில்லையாம்.

கே.எஸ்.மூர்த்தி

அ.தி.மு.க கவுன்சிலர்களை, ரூ.1 கோடி வரை வாங்கிகொண்டு விஜய்கண்ணனோடு அனுப்பி வைத்ததே, குமாரபாளையம் நகர பொறுப்பில் உள்ள ஒரு புள்ளிதான் என்று சொல்லப்பட்டது. அதேபோல், கடந்த தேர்தலில் பரமத்தி வேலூர் தொகுதியில் தோற்ற தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்திக்கு, குமாரபாளையத்தை கைப்பற்றுவது வாழ்வா சாவா பிரச்னை. ஆனால், அவரால் எதையும் செய்யமுடியவில்லை. இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி 17 கவுன்சிலர்களோடு வந்து, தனக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, குமாரபாளையம் நகராட்சி சேர்மனாக விஜய்கண்ணன் முடிசூடிக்கொண்டார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், விஜய்கண்ணன் பா.ஜ.க-வில் வர்த்தக அணியில் மாவட்ட பொறுப்பில் இருந்தார். தங்கமணியால் தொழில்ரீதியாக பாதிக்கப்பட, தி.மு.க-வுக்கு தாவினார். ஆனால், தி.மு.க நகரச் செயலர் செல்வம், விஜய்கண்ணனுக்கு குடைச்சல் கொடுக்க, தங்கமணி, செல்வம் இருவரையும் பழிவாங்கவே சுயேச்சையாக போட்டியிட்டு, குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்றும் ரிவெஞ்சை எடுத்தாராம். ஆனால், தி.மு.க நகரச் செயலர் செல்வம் தலைமையில், ‘கட்சிகட்டுப்பாட்டை மீறி விஜய்கண்ணனுக்கு வாக்களித்த 7 கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், விஜய்கண்ணனோ, ‘விரைவில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை, எனக்கு வாக்களித்த 17 கவுன்சிலர்களோடு சென்று சந்தித்து, தி.மு.க-வில் இணைவேன். தமிழகத்திலேயே சிறந்த நகராட்சியாக குமாரபாளையத்தை மாற்றிக்காட்டுவேன்’ என்று பேட்டி கொடுத்தார். இதற்கிடையில், விஜய்கண்ணனுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க கவுன்சிலர்களான நாகநந்தினி, ரேவதி, பூங்கொடி, அவர்களின் கணவர்கள், அ.தி.மு.க நகரச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட 7 பேரை கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறது அ.தி.மு.க தலைமை.

தீர்மானம் நிறைவேற்றிய தி.மு.கவினர்

ஆனால், விஜய்கண்ணனுக்கு ஆதரவளித்த 7 தி.மு.க கவுன்சிலர்கள் மீது அந்தக் கட்சித் தலைமை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஜய்கண்ணன் தி.மு.க-வில் இணைவது உறுதி. ஆனால், விஜய்கண்ணன் தி.மு.க-வுக்கு வரக்கூடாது என்று செல்வமும், தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தியும் ஏக முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். என்ன நடக்கப்போகுதுனு பொறுத்திருந்துதான் பார்க்கணும்” என்றார்கள்.

இதுகுறித்து, விஜய்கண்ணன் தரப்பில் பேசினால், “அண்ணன் தி.மு.க-வுக்கு போக தயாராகிவிட்டார். தி.மு.க தலைமை கொடுக்கும் அப்பாயிண்ட்மெண்ட்டுக்காக காத்திருக்கிறார். யார் முட்டுக்கட்டைப் போட்டாலும், விஜய்கண்ணன் தி.மு.க-வுக்கு வருவதை தடுக்க முடியாது” என்றார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.