பிரான்சில் கொரோனா தொற்று குறைந்ததால் பள்ளி, அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை

பாரிஸ்:
உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது வெகுவாக குறைந்து விட்டது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.
பிரான்சில் மொத்தம் 6.7 கோடி மக்கள் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்துவது போன்றவை கட்டாயப்படுத்தப்பட்டன.
12 வயதுக்கு மேற்பட்ட 92 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டனர். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பிரான்ஸ் அரசு நேற்று முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
அதன்படி பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஓட்டல்கள், மதுபான கூடங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றுக்கு செல்ல தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஓட்டல்கள், விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததற்கான சான்றிதழை காட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கியதற்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியான நடவடிக்கை கிடையாது. கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்க வேண்டும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.