”மத்திய அரசு செய்தவற்றை தங்களால் நடந்ததாக கோவை எம்.பி விளம்பரப்படுத்துகிறார்” – வானதி சீனிவாசன் சாடல்

கோவை: “கோவைக்கு மத்திய பாஜக அரசு செய்ததை எல்லாம் பட்டியல் போட்டு, எல்லாம் தங்களால்தான் நடந்தது என எம்.பி. பி.ஆர்.நடராஜன் விளம்பர அறிக்கை வெளியிட்டு வருகிறார்” என்று பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் அல்லது கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.

ஆனால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போன்ற தமிழக பகுதிகள் பாலக்காடு கோட்டத்தில் இருப்பதை மறைத்துவிட்டு, ஒட்டுமொத்த கோவை மாவட்டமும் சேலம் கோட்டத்தில் இருப்பது போல கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் 30 ஆண்டுகள் கோவை எம்.பி.யாக இருந்திருக்கின்றனர். இதனை சுட்டிக்காட்டி, இங்கு ரயில்வே திட்டங்களுக்காக என்னென்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில், மீண்டும் என் மீது விமர்சனங்களை பி.ஆர்.நடராஜன் வைத்திருக்கிறார்.

மேலும், கரோனா தடுப்பூசி, ஜி.எஸ்.டி வரி குறைப்பு, கோவை சர்சார் வல்லபபாய் பட்டேல் ஜவுளி கல்லூரியில் மாணவர் சேர்க்கை, கோவை-பொள்ளாச்சி-பழனி தற்காலிக வழித்தடம் நிரந்தரமாக்கப்பட்டது, பாலக்காடு-ஈரோடு, கோவை-பொள்ளாச்சி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு, வடகோவை ரயில்நிலையத்தில் நடைமேடை போன்ற பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, தானே கொண்டு வந்ததுபோல நடராஜன் கூறியிருக்கிறார். இந்த கோரிக்கைகளை பல ஆண்டுகளாக பாஜக வலியுறுத்தி வருகிறது.

மேலும், எம்எல்ஏவாக ஆன பிறகு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சி ஆணையர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோவை தெற்கு தொகுதிக்கு மட்டுமல், ஒட்டுமொத்த கோவை மக்களுக்கான கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறேன். பாதுகாப்பு தொழில் வழித்தடம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அம்ருத் திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை பணிகள், சாலைகள் என எண்ணற்ற திட்டங்களை பாஜக அரசின் சார்பில் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினராக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியவர், எல்லாம் தங்களால் தான் நடந்தது என்று மக்களை ஏமாற்றுவதற்காக, விளம்பர அறிக்கை வெளியிட்டு வருகிறார். மத்திய அரசு செய்ததை எல்லாம் தாங்கள் செய்ததாக பட்டியல்போட்டு கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி செய்த ஒரு நல்ல விஷயத்தை சொல்ல முடியுமா என்று அவர் கேட்டிருப்பதற்கு கோவை மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.