Ajith 62: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில்… காமெடி ஜானரில் களமிறங்குகிறாரா அஜித்?

‘வலிமை’க்கு பின் மீண்டும் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. அஜித்தை பொறுத்தவரை ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துவிடுவார். அதுவும் அவருக்கு தோதுவான இயக்குநர்கள் என்றால் அடுத்தடுத்து அவர்களிடமே தன்னை ஒப்படைத்தே விடுவார். அப்படித்தான் ‘சிறுத்தை’ சிவாவுடன் நான்கு படங்களில் பணியாற்றினார். அதனையடுத்து ஹெச்.வினோத்துடன் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

வலிமை அஜித்

சரி விஷயத்திற்கு வருவோம். ‘அஜித் 61’ படப்பிடிப்பில் அஜித் பங்கேற்றாரா, இல்லை இனிமேல்தான் கலந்து கொள்வாரா என்பது இன்னும் உறுதிசெய்படாமல் இருக்கும் சூழலில் தீடீரென ‘அஜித் 62’ பற்றிய பேச்சு தற்போதே கிளம்பியுள்ளது. இப்படத்தை லைகா தயாரிக்கப் போவதாகவும், விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், நயன்தாரா ஹீரோயின், அனிருத் இசை எனவும் ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் கேட்கிறது.

இதுபற்றி விசாரித்தோம்.

“‘அஜித் 62’ஐ தயாரிக்க ஒரே சமயத்தில் மூன்று கம்பெனிகள் போட்டிப் போடுகின்றன. சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ் என மெகா தயாரிப்பு நிறுவனங்கள் அஜித்திடம் பேசி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஹீரோக்கள்தான் தயாரிப்பு நிறுவனத்தை, இயக்குநர்களைத் தேர்வு செய்துவருகின்றனர். ரஜினியிலிருந்து விமல் வரை ஹீரோக்கள்தான் இயக்குநர்களை முடிவு செய்து வருகிறனர்.

அஜித்துடன் விக்னேஷ் சிவன்

அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, அனிருத் கூட்டணி லைகாவுடன் கைகோர்க்க உள்ளதாகச் சொல்கிறார்கள். விக்னேஷ் சிவன் ஏற்கெனவே அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’ என்ற ஹிட் பாடலை எழுதியிருக்கிறார். சமீபத்திய ‘வலிமை’யிலும் இரண்டு பாடல்கள் எழுதியிருப்பதால் அஜித்தின் குட்புக்கில் அவர் ஏற்கெனவே இருக்கிறார். அதுபோலவே அனிருத்தும், நயனும் இதற்கு முன்னரே அஜித்துடன் பயணித்திருக்கிறார்கள்.

எனவே ‘அஜித் 62’க்கான அறிவிப்பு அடுத்த வாரமே வெளியானாலும் ஆச்சரியமில்லை. என்றாலும் அஜித் 61 வெளியான பிறகே 62-க்கான ஷூட் தொடங்கும். அநேகமாக டிசம்பரில் படப்பிடிப்பைத் துவங்கலாம். நகைச்சுவை ததும்பும் ஒரு கதை இது இருக்கும்” என்றும் விவரிக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.