ரூ.139 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது சேப்பாக்கம் மைதானம்!

சென்னை: இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த மைதானம் தற்போது ரூ.139 கோடி புதுப்பிட்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கு தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டின் புகழை உலக நாடுகளிடையே பறைசாற்றுவதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் சளைத்தது அல்ல. இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று என்ற பெருமை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு. 1916-ம் ஆண்டு முதல் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 1934-ம் ஆண்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.  அதைத் தொடர்ந்து  சுமார் 88 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகள் இந்த மைதானத்தில்  நடைபெற்று வருகின்றன.

பல சாதனைகளுக்கு சொந்தக்காரனாக  உள்ள இந்த மைதனம், ஏராளமான  சாதனைகள் வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெற்றியும் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானம்தான்.   1952-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தங்கள் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. சேப்பாக்கம் மைதானம் இந்திய அணிக்கு மட்டுமின்றி இந்திய வீரர்களுக்கும் ராசியானதாக உள்ளது. இங்கு இந்திய வீரர்கள் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுனில் கவாஸ்கர், 30-வது சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தது சேப்பாக்கம் மைதானத்தில்தான். 1983-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.

ஆனால், இந்த மைதானத்தின் நிர்வாகம் குத்தகை கட்டணம்  கட்டாத காரணத்தால் கடந்த 2015ம் ஆண்டு சிலகாலம் முடக்கி வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் தலையிட்டு,  குத்தகை பாக்கி தொடர்பான வழக்கில் நிரந்தர வைப்புத் தொகை செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு லண்டனை சேர்ந்த கட்டுமான நிறுவனம்.  அடிலெய்ட் ஓவல் மற்றும் லண்டன் லார்ட்ஸ் மைதான அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச தரத்திற்கு மாற்றி  அமைத்தது.  அதே வேளையில் அந்த மைதானத்தில் செயல்பட்டு வந்த  மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டடம் பாரம்பரியமிக்க புரதான சின்னம் என்று அறிவிக்கப்பட்டதால், அதனை இடித்து கட்ட அனுமதி வழங்கப்பட வில்லை.

இது குறித்து பல முறை அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் 10 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. பின்னர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கட்டிடத்தை இடிக்க  சென்னை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் அனுமதி தந்தது.

இதனையடுத்து அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு (2022) ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பு  மைதானத்தை தயார் செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தற்போது கிரிக்கெட் மைதானத்தை மேலும் விரிவாக்கம் செய்யவும், புதுப்பித்தல் பணிக்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி, ரூ.139 கோடி செலவில், சேப்பாக்கம் மைதானம் தற்போதுள்ள 72 ஆயிரம் சதுர அடியானது 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி,  36,000 பார்வையாளர்கள் தங்கும் வகையில் மைதானம் விரிவுபடுத்தப்படும். அதில், நீர்நிலைகள் மற்றும் ஓடை சார்ந்த பகுதிகளில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.

விரிவாக்க பணிகளுக்கு பின்பு சேப்பாக்கம் எம்ஏசிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையும் புதுப்பொலிவுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.