ஐபிஎல் 2022: தீபக் – ருதுராஜ் சிஎஸ்கே அணியில் இணைவது எப்போது? நீளும் கேள்விகள்!

15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் போட்டிகள் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் தொடரில் களமிறங்குகின்றன. இத்தொடருக்கான முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறவுள்ளது.

தீபக் சாகர் – ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் இணைவது எப்போது?

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த மாதம் பெங்களுருவில் நடந்த நிலையில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.14 கோடி கொடுத்து தீபக் சாகரை வசப்படுத்தியது. ஆனால், அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் நடப்பு சீசனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாடும் அணியில் இணைவதில் சற்று பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர், கடந்த மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரின் போது தசைப்பிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ருதுராஜ்-க்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் உடற்தகுதி தேர்வில் தகுதி பெறும் பட்சத்தில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் சூரத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்.

ஆனால், தீபக் சாகருக்கு உடற்தகுதி தேர்வுக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. இதனால் அவர் சென்னை அணியுடன் எப்போது இணைவார் என்பது குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

ருதுராஜ் மற்றும் சாகரின் நிலைமை குறித்து பேசியுள்ள சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி, அவருக்கு கூட தற்போது எந்த தெளிவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களின் தற்போதைய உடற்தகுதி நிலை குறித்து எங்களுக்குத் தெரியாது, மேலும் அவர்கள் எப்போது அணியில் சேருவார்கள் என்பதை தற்போதைக்கு எங்களால் உங்களுக்குச் சொல்ல முடியாது. அவர்கள் மேட்ச் ஃபிட்டாக இருந்தால், பிசிசிஐ எங்களிடம் பேசுவார்கள் என்று கூறியுள்ளனர்.” என்று பிடிஐ செய்தியில் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.