'காங்கிரஸ் தலைவர் விரும்பியபடி பதவி விலகுகிறேன்' – சித்து ராஜினாமா கடிதம்

சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் விரும்பியபடி நான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று குறிப்பிட்டு தனது ராஜினாமா கடிதத்தை இணைந்து ட்வீட் செய்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.காங்கிரஸ் தலைவருக்கு என்று குறிப்பிட்டு எழுதப்பட்ட அக்கடிதத்தில் ‘நான் எனது பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று ஒற்றை வரியில் ராஜினாமா பற்றி குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன.

இதில் உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. மேலும் பஞ்சாபில் ஆட்சியையும் பறிகொடுத்துள்ளது. பஞ்சாபில் நேர்ந்த உட்கட்சிப் பூசல் காரணமாக அங்கு ஆட்சியை ஆத் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்று உத்தரவிட்டார்.

5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. முக்கியமாக பஞ்சாப்பில் ஆட்சியை பறிகொடுத்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கோவா காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ராயா, உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் லோக்கேன் சிங் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.