சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் அனுமதி; நடப்பாண்டு முதல் தமிழக அரசின் அரசாணை அமல்

புதுடெல்லி: சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நடப்பாண்டு முதலே இது தொடர்பான அரசாணை அமலுக்கு வருகிறது. சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம்,’ என கடந்த 2020ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு மருத்துவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘கலந்தாய்வு நடைமுறைக்கு வந்து விட்டதால் நடப்பு கல்வியாண்டில் அதாவது 2020-2021ல் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இன்சர்வீஸ் இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கும் சூழல் இல்லை. ஆனால், வரும் காலங்களில் இதுபோன்ற  50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாநில அரசு, தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோர் கலந்து ஆலோசித்து ஒரு முடிவை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தலாம். இருப்பினும், இதுசார்ந்த மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்த தடையும் கிடையாது,’ என கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இதையடுத்து, 2022ம் ஆண்டு மருத்துவ கலந்தாய்வின் போது 50 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்த தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதற்கு தடை விதிக்க மறுத்ததோடு, இந்த ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு அதுசார்ந்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் என்பவரின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘இது சாதிவாரியான ஒதுக்கீடு இல்லை, மாறாக இது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. மேலும் இது மருத்துவ படுப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே மேலும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த ஒதுக்கீடு சரியானதே,’ என வாதிட்டார்.இதையடுத்து, ஒன்றிய அரசு தரப்பில், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் 2017ல் இருந்து இட ஒதுக்கீடு வழங்கவில்லை. எனவே, அதையே தொடர வேண்டும், இந்த ஆண்டும் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கூடாது,’ என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்  வாதத்தில், ‘அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோடு, அரசாணையையும் உடனடியாக இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது . இதனை செயல்படுத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது,’ என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வு நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘தமிழக அரசின் அரசாணையின்படி  நடப்பு கல்வி ஆண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு மாநில அரசு ஒதுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இதுதொடர்பான பிரதான வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின்னர் பட்டியலிட்டு விசாரிக்கப்படும்,’ என உத்தரவிட்டனர்.இது ஜாதிவாரியான ஒதுக்கீடு இல்லை, மாறாக, அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடாகும். மேலும், இது மருத்துவ படிப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வும் இந்த ஒதுக்கீடு சரியானதே என்று கூறியுள்ளது. – தமிழக அரசு வாதம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.