OTT – ஒரு தப்பித்தல் தந்திரம்?!

சினிமாவினால் நாடக மேடைகள் பொலிவிழந்து போகும் என்று சொல்லப்பட்டதுபோலவே தொலைக்காட்சி, வீடியோ கேஸட், சிடி, டிவிடி, இணைய வழி காணொலிகளால் சினிமா காணாமல் போகும் என்ற குரலும் நெடுநாட்களாக ஒலித்துவருகிறது. இவற்றினால் சினிமாவை மக்களிடம் எடுத்துச் செல்லும் நுட்பங்களிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஓடிடியின் வரவும் மேற்கண்ட பட்டியலில் இணைந்திருக்கிறது. ஆனால், சமீபகாலமாக ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களைப் பார்க்கும்போது அது உண்மையிலேயே நல்ல மாற்றம்தானா என்ற சந்தேகம் எழுகிறது. ஓடிடி என்பது ஒரு தப்பித்தல் தந்திரம் என்ற சிந்தனையே பெருகுகிறது.

நட்சத்திர மோகம்!

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பெருநகரங்களில் 4 அல்லது 5 திரையரங்குகளில் புதிதாக வெளியாகும் படங்களை வெளியிடுவார்கள். சாதாரண நகரங்களில் ஒரு திரையரங்கில் அவை ஓடிக்கொண்டிருக்கும். அருகருகே இருக்கும் இரு நகரங்களில் ஒரு திரைப்படம் ஓடினாலே பெரிய அதிசயமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. அதிலிருந்து விலகி, அதிகத் திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியாகும் போக்கு 2000களில் தொடங்கியபோது தமிழ் திரையுலகமே பரபரத்தது. இதனால் 100 நாள், வெள்ளிவிழா படங்கள் குறையுமென்ற அச்சம் முளைத்தது.

மாறாக, நட்சத்திரங்களின் புதிய படங்கள் அதிகத் திரையரங்குகளில் வெளியாகி முதல் 5 அல்லது 6 வாரங்களிலேயே அதிக வசூல் சாதனையைப் படைத்தன. தொடக்க நாளன்றே அதிகப் பார்வையாளர்களைச் சென்றடையும் வசதி என்று சொல்லப்பட்டாலும், மிகச்சுமாரான படங்கள் கூட அதீத பப்ளிசிட்டியுடன் வெளியாகி ‘கல்லா’ கட்டியதும் நடந்தேறியிருக்கிறது.

கோப்புப்படம்

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அதிக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகும் விளம்பரத்தைக் கண்டு சாதாரண ரசிகர்கள் உஷாராகும் அளவுக்கு இந்த நிலைமை சென்றதற்கு சமீபத்திய உதாரணங்கள்கூட உண்டு. இந்த நட்சத்திர மோகம் ஓடிடியிலும் தொடர்வது வேதனை.

ஏமாற்றிய மகானும் மாறனும்

சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ‘
மகான்
’, டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘
மாறன்
’ இரண்டும் ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் மட்டுமே ரசிகர்களின் அபிமானத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற விவாதத்திற்கு நடுவே இவை ஓடிடியில் வெளியாகியிருப்பது மிகப்பெரிய கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடெங்கும் முதல் மூன்று நாட்களில் திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்கும் அளவுக்கு முன்னணி வரிசையில் இருக்கும் நட்சத்திரங்கள்தான் விக்ரமும் தனுஷும். 2016இல் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில்
விக்ரம்
நடித்த ‘இருமுகன்’ வெற்றி பெற்ற அளவுக்கு ‘ஸ்கெட்ச்’, ‘சாமி ஸ்கொயர்’, ‘கடாரம் கொண்டான்’ ஆகியன வெற்றியை ஈட்டவில்லை. கௌதமின் ‘துருவ நட்சத்திரம்’ இன்னும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளது. கூடவே அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’வும் மணிரத்னத்தின் ‘பொன்னியில் செல்வனு’ம் வெளியாகத் தாமதமாக, ‘மகான்’ ரிலீஸ் அறிவிக்கப்பட்டது.

தனுஷ், விக்ரம்

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட சூழலில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் வெளியானது ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், படம் பார்த்த பிறகு அது உண்டானது. இத்தனைக்கும் படம் முழுக்க வெவ்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகள், கதாபாத்திர மனநிலையில் மாறுபாடு என்று விக்ரமுக்கு ‘அல்வா’ சாப்பிடும் அம்சங்கள் நிறைய இருந்தன. போதாக்குறைக்கு துருவ் வேறு அவருக்குச் சமமான ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மதுவிலக்கை எதிர்க்கிறதா ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு பதில் இல்லாதது கதையின் அடிப்படையையே வலுவிழக்க வைத்தது. எதிர்மறை விமர்சனங்கள் கொட்டின. படத்தின் நீளம் அதிகம் என்பதும் விமர்சிக்கப்பட்டது. நீளத்தைக் குறைக்க வாணி போஜனுடன் விக்ரம் நடித்த காட்சிகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டதும் அரங்கேறியது.

ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளான நிலையில், அது போன்ற பின்னூட்டம் இதிலும் கிடைத்தது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.

கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட ‘கர்ணன்’ நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்தது. ’மாஸ்டர்’ பாணியில் 4 வாரங்களில் அமேசான் பிரைமில் வரவேற்பைப் பெற்றது. அதே புகழை ‘ஜகமே தந்திரம்’ ஈட்டவில்லை. அதனைத் தொடர்ந்து அக்‌ஷய்குமார், சாரா அலிகானுடன் நடித்த ‘அத்ராங்கி ரே’, தற்போது ‘மாறன்’ ஆகியன டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளன. அத்ராங்கி ரே இந்திப் படம் என்பதால், அதனை
தனுஷ்
ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கார்த்திக் நரேன் தந்திருக்கும் ‘மாறன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அபரிமிதமாக இருந்தது. ஆனால் படத்தின் உள்ளடக்கம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை.

எதற்கும் துணிந்தவன்: பிசுபிசுத்துப்போன மிரட்டல் அரசியல்

திரையரங்குகளில் வெளியானால் கிடைக்கும் விளைவை முன்கூட்டியே கணித்து, ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்புமளவுக்கு இவ்விரு திரைப்படங்களும் அமைந்திருக்கின்றன. ஆனால், இதற்கு முன்பு ஓடிடி தளங்களில் வெளியான சில படங்களும் அவ்வாறே உள்ளன என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

ஏமாற்றம் தொடர்கதை!

2021இல் மாறா, பூமி, புலிக்குத்தி பாண்டி, ஏலேய், டெடி, மண்டேலா, சர்பத், வணக்கம்டா மாப்ளேய், மலேசியா டூ அம்னீஷியா, ஜகமே தந்திரம், மேதகு, மாடத்தி, வாழ், சார்பட்டா பரம்பரை, திட்டம் இரண்டு, நெற்றிக்கண், டிக்கிலோனா, துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, நடுவன், ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், லிப்ட், வினோதய சித்தம், உடன்பிறப்பே, ஓ மணப்பெண்ணே, என்னங்க சார் உங்க சட்டம், ஜெய் பீம், எம்ஜிஆர் மகன், பொன்மாணிக்கவேல், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், சித்திரை செவ்வானம், பிளட் மணி, கசடதபற ஆகிய படங்கள் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5, சோனிலிவ் உட்பட பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாயின.

கோப்புப்படம்

இந்த பட்டியலில் ஏலேய், சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம் ஆகியன திரையரங்குகளில் வெளியாகியிருக்கலாமே என்று ரசிகர்களை ஏங்க வைத்திருந்தன. நயன்தாராவின் நெற்றிக்கண், சந்தானத்தின் டிக்கிலோனா, விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி, சசிகுமார், ஜோதிகாவின் உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், மாதவனின் மாறா ஆகியன பெரும் ஏமாற்றத்தைப் பரிசளித்தன. மண்டேலா, மேதகு, மாடத்தி, திட்டம் இரண்டு, வினோதய சித்தம் உள்ளிட்ட மிகச்சில மட்டுமே ஓடிடிக்கான படங்களாகக் கொண்டாடப்பட்டன. மற்றவற்றில் சில விமர்சக ரீதியாகவும், சில அபிமான ரீதியிலும் பாராட்டப்பட்டன.

2022இல் இதுவரை அன்பறிவு, முதல் நீ முடிவும் நீ, பன்றிக்கு நன்றி சொல்லி, மகான், கிளாப், மாறன் ஆகியன ஓடிடியில் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் ரசிகர்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமான கலைஞர்களின் படங்களைக் கழித்தால் மீதமுள்ளவை அத்தளத்திற்காக எடுக்கப்பட்டவை அல்லது திரையரங்குகளில் வெளியாவதைவிட ஓடிடியில் பரவலான வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் வெளியிடப்பட்ட பட்டியலில் அடங்கும். இந்த வித்தியாசமே எதிர்காலத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்களில் எவையெல்லாம் வெற்றி பெறும் என்ற சூத்திரத்தை வகுத்துவிடும். மாறாக, நட்சத்திரங்களின் படங்கள் ஓடிடியை ஆக்கிரமித்தால் குறிப்பிட்ட பார்வையாளர்களுக்காக எடுக்கப்படும் படங்களுக்கு இடம் கிடைக்காத சூழலும் உருவாகலாம்.

அட்சய பாத்திரம்!

திரையரங்குகளில் வெற்றிகரமான படங்களாகக் கொண்டாடப்பட்டதோடு ஓடிடியிலும் புகழ் ஈட்டிய படைப்புகள் சில இருக்கின்றன. சமீபத்தில் அறிமுகமான ஆஹா தமிழ் தளத்தில் ரைட்டர், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்றவை அத்தகைய வரவேற்பை பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு வெளியானவற்றில் கமலி ஃப்ரம் நடுக்காவிரி, பாரிஸ் ஜெயராஜ், களத்தில் சந்திப்போம், அன்பிற்கினியாள், தீதும் நன்றும், எனிமி, கடசீல பிரியாணி, பேச்சலர், ஆண்டி இண்டியன், டாக்டர் ஆகியன பெரும் வரவேற்பை ஓடிடி தளங்கள் வழியாகவும் பெற்றன.

தமிழில் குறிப்பிடத்தக்க வெப்சீரிஸ்கள் இல்லை என்று சொல்லப்பட்ட சூழலில், ’நவம்பர் ஸ்டோரிஸ்’, ‘விலங்கு’ போன்றவை அதை உடைத்தெறிந்துவருகின்றன. இந்த நிலையில், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்கள் கொஞ்சம்கூட வரவேற்பைப் பெறாமல் போவது நல்ல அறிகுறியில்லை.

பருவநிலை சீர்குலைவு: என்ன செய்யப் போகிறோம் நாம்..?

ஒருபுறம் கூடுதல் வருவாய்க்கான வழியாக ஓடிடி தளங்கள் மாறுகின்றன. இன்னொரு பக்கம் அது பரீட்சார்த்த முயற்சிகளுக்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இதில் மூன்றாவதாக ஒரு ரகமும் சேர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது. வழக்கமான வணிக வெற்றியை ஈட்ட முடியாது என்ற அச்சத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு அவற்றை ‘ஒரு தப்பித்தல் தந்திரம்’ ஆகப் பயன்படுத்தும் போக்கும் பெருகி வருகிறதோ என்ற எண்ணத்தையே விதைக்கின்றன குறிப்பிட்ட சில திரைப்படங்கள். திரையரங்க தரிசனமோ ஓடிடியில் அரங்கேற்றமோ, எடுக்கும் படத்தை உருப்படியாக எடுப்பதுதான் இந்த அவப்பெயரைத் துடைத்து ரசிகர்களைத் தக்கவைக்கும் ஒரே வழி என்று தோன்றுகிறது! இல்லையேல் “ஓடிடியில் ரிலீசா?” என்று நமுட்டுச் சிரிப்புடன் ரசிகர்கள் இவற்றைக் கடந்து போய்விடுவார்கள். பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் இதே கதிதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.