”பாஜக தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்” – அண்ணாமலை பேச்சு

மதுரை: தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் இன்று (வியாழக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவில் போட்டியிட்டவர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “உள்ளாட்சி தேர்தலில் எத்தனை வாக்குகள் வாங்கியிருந்தாலும் அது வைர வாக்குகள். அதற்காக பெருமைப்பட வேண்டும்.

தேர்தலின் போது வீடு வீடாக சென்று பொதுமக்களைச் சந்தித்து மக்கள் மனதில் பாஜக அனைவருக்குமான கட்சி என்பதை நிலை நிறுத்தியுள்ளீர்கள். இதனால் பாஜகவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தளர்ந்து விடக்கூடாது. பணம், படை பலத்தை எதிர்த்து பெற்ற வாக்குகள் பெரிய வாக்குகள். அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம்.

பாஜகவில் உறுப்பினராக சேர பாரத அன்னை மீது மரியாதை, நம்பிக்கை இருந்தால் போதும். ஒரு குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டியதில்லை. வரும் காலம் பாஜகவின் காலம். கடுமையாக உழைத்து வருகிறோம். தொடர்ந்து உழைப்போம்.

திமுகவினரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். நேரடியாக மோத முடியாவிட்டால் தவறாக பேசுவார்கள். அது திமுகவுக்கு கைவந்த கலை. அவற்றை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து உழைத்தால் தமிழக மக்களின் விடிவெள்ளியாக பாஜக வளரும்.

நான்கு மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அடுத்து குஜராத், கர்நாடகம், டெல்லி தேர்தல்கள் வரவுள்ளன. 2024 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. நமது சந்தேகம் 300 இடங்களா, 400 இடங்களா, 450 இடங்களைப் பிடிப்போமா என்பதுதான்.

தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது” என்று அவர் பேசினார்.

முன்னதாக பாஜக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். பாஜக மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.