"பேரிக்காய் மண்டையா.. பன்னி மூஞ்சி வாயா".. கண்டிக்காமல் சிரித்து கடந்த பரம்பரையாச்சே நாம!

ஒருவருடைய உருவத்தை வைத்து கேலி செய்வது என்று எடுத்துக் கொண்டால் தமிழ் சினிமாவை மிஞ்ச யாருமே கிடையாது. “பேரிக்காய் மண்டையா.. தவளை வாயா”.. என்றெல்லாம் தமிழ் சினிமாவில் காமெடியன்கள் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும்.

உருவக் கேலி
என்பதை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே பலர் கருதிக் கொள்கின்றனர். குள்ளமாக இருந்தாலும் கேலி செய்கிறார்கள்.. உடல் பருமனாக இருந்தாலும் கேலி செய்கிறார்கள்.. கலர் கம்மியாக இருந்தாலும் கேலி, உயரமாக இருந்தாலும் கேலி.. இப்படி எடுத்ததற்கெல்லாம் கேலி செய்வதில் நம்மவர்களை யாரும் மிஞ்ச முடியாது.

தமிழ் சினிமாவில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை உருவக் கேலி காட்சிகள் மலிந்து போய்க் கிடக்கின்றன. குறிப்பாக காமெடியன்கள் பேசும் பல வசனங்களைக் கேட்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும். சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன்,
கவுண்டமணி
, வடிவேலு என இதில் யாருமே விலக்கு இல்லை. பல நேரங்களில் வில்லன் நடிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மனதை புண்படுத்தும்படி இருக்கும்.

“சபாஷ்.. சரியான பளார்”.. வில் ஸ்மித் விட்ட அடிக்கு.. ராமதாஸ் சூப்பர் சப்போர்ட்!

கவுண்டமணி படங்களில் உருவக் கேலிக்குப் பஞ்சமே இருக்காது. குறிப்பாக சக காமெடியன் செந்திலை வைத்து அவர் பேசிய பெரும்பாலான வசனங்கள் மனதைப் புண்படுத்தக் கூடியவைதான். செந்திலுக்கு அவர் வைத்த “அந்த வாயா இந்த வாயா” ரக பெயர்கள் எல்லாம் கொடுமையானவை. ஒரு மனிதனை எப்படியெல்லாம் இழிவுபடுத்தக் கூடாதோ, அதையெல்லாம் செய்தவர் கவுண்டமணி. அவராக விரும்பிச் செய்தாரா அல்லது இயக்குநர்கள், வசனகர்த்தாக்கள் சொல்லிக் கொடுத்ததை பேசினாரோ.. எதுவாக இருந்தாலும் அவர் பேசிய பெரும்பாலான வசனங்கள் உருவக் கேலிதான்.

ஒரு படத்தில் செந்திலை நாய் நாய் என்று பலமுறை திட்டிப் பேசியிருப்பார் கவுண்டமணி. அதைப் பார்த்து ரசிகர்கள் கை தட்டி குலுங்கி குலுங்கிச் சிரிக்கத்தான் செய்தார்கள். யாருக்கும் கவுண்டமணி பேசியது மனதைப் புண்படுத்தக் கூடிய வார்த்தை என்று உறைக்கவே இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். இதுபோல பல உதாரணங்களைச் சொல்லலாம். கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும் என்ற வசனம் பெண்களை இழிவுபடுத்தக் கூடியது.. அதையும் நாம் வயிறு வலிக்க சிரித்துக் கடக்கத்தான் செய்தோம். அதேசமயம், கவுண்டமணி பல புரட்சிகரமான சமூகக் கருத்துக்களையும் ஜஸ்ட் லைக் தட் கொடுத்துச் சென்றவர் என்பதையும் மறுக்க முடியாது.

நடிகர் சந்தானமும் கூட மனதைப் புண்படுத்தக் கூடிய பல வசனங்களைப் பேசியவர்தான். கால் ஊனமானவர்களைப் புண்படுத்தக் கூடிய வகையில் “சைட் ஸ்டேண்ட்” என்று பேசி பலரது கண்டனங்களைச் சம்பாதித்துள்ளார். நடிகர் விஜய் கூட “பிகில” படத்தில் “குண்டம்மா” என்று சொல்லி பலரது அதிருப்தியைச் சம்பாதித்தார். ஒவ்வொரு நடிகரும் இதுபோல பேசத் தவறுவதில்லை.

ஒருவரை இழிவுபடுத்தித்தான், ஒருவரை விமர்சித்துத்தான், ஒருவரை தாழ்த்தி கேலி செய்துதான் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனமான பார்முலாவைக் கையில் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் பலரும். சிரிக்க வைப்பதற்காக ஆக்கப்பூர்வமான விஷயங்களை கையில் எடுப்பவர்களை விட அடுத்தவர்களை புண்படுத்தி சிரிக்க வைப்பதுதான் சுலபம் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. அப்படித்தான் கிறிஸ் ராக் நேற்று பேசி வில் ஸ்மித்திடம் அடி வாங்கினார். ஆனால் இதெல்லாம் காலம் காலமாக நடந்து வருவதுதான்.. என்ன ராக்கை அடித்த
வில் ஸ்மித்
போல மற்றவர்கள் அடிக்கவில்லை.. அமைதியாக போய் விட்டார்கள்.. இதுதான் உண்மை.

உருவக் கேலி செய்யாமல், மனதைப் புண்படுத்தாமல் அடுத்தவர்களை சிரிக்க வைத்துப் பாருங்கள்.. உலகம் உங்களை பாராட்டும்.

அடுத்த செய்திOscar 2022: ஆபத்து.. வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் குழு கடும் கண்டனம்.. பறிக்கப்படும் விருது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.