இந்தியா – இலங்கை ஒப்பந்தம்| Dinamalar

கொழும்பு:இலங்கையின் யாழ்ப் பாணம் பகுதியில், மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடர்பாக, அந்த நாட்டுக்கும், நம் நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, அண்டை நாடான இலங்கைக்கு வந்துள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 18வது ‘பிம்ஸ்டெக்’ அமைச்சர்கள்கூட்டத்தில் உரையாற்றினார்.

இதுகுறித்து, அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பு, அனைத்து துறைகளிலும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். குறிப்பாக, எரிசக்தி, போக்குவரத்து, கடலோர பாதுகாப்பு ஆகியவற்றில், கூட்டுறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும். உறுப்பு நாடுகள் ஒற்றுமையுடன் பயங்கர வாதம், வன்முறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்.

இலங்கையின் கண்டி நகரில் உள்ள மருத்துவமனையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.அதனால், அனைத்து அறுவை சிகிச்சைகளும் தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டு
உள்ளன. வேதனையான இந்த செய்தியை கேள்விப்பட்டதும், கொழும்பில் உள்ள இந்திய துாதர் கோபால் பக்லேவை தொடர்பு கொண்டு, இந்தியாவால் எந்த வகையில் உதவ முடியும் என்பதை கேட்டறிந்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியா – இலங்கை இடையே, மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் முன்னிலையில், இரு நாட்டு அதிகாரிகளும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது தவிர, கடலோர பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த மீட்பு மையம் அமைப்பது, இலங்கையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது, இந்தியாவின் நிதி உதவியுடன் இலங்கையில் ‘டிஜிட்டல்’ அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவது ஆகிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

மேலும், இலங்கையின் காலே மாவட்டத்தில், 200 பள்ளிகளில் கம்ப்யூட்டர் மையம் அமைப்பது, இலங்கையில் வெளியுறவுத் துறை பணிகளுக்கான பயிற்சி மையம், சர்வதேச துாதரக பயிற்சி மையம் அமைப்பது ஆகிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.