சென்னையில் 2-வது விமான நிலையம் எங்கே? எப்போது? மத்திய அமைச்சர் சொன்ன அப்டேட்

சென்னையில் 2-வது விமான நிலையம் எங்கே, எப்போது அமைக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கும் தமிழக மக்களுக்கு, புதிய தகவல் ஒன்றை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

போபால் – சென்னை இடையே நேரடி விமான சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் போபால் – சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தனர். காணொலி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை வடக்குத் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் வீராசாமி கலாநிதி, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் ராஜீவ் பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போபால் – சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தப் பின் பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்களுக்கு 2-வது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டெல்லிக்கு அருகே 2-வது விமான நிலையத்தை ஜிவாரில் கட்டி வருகிறோம். அதேபோல, மும்பையில் 2-வது விமான நிலையம் நவி மும்பையில் 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறோம்.

இதையடுத்து, சென்னைக்கு 2-வது விமான நிலையத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாநில அரசு 4 இடங்களை விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. மாநில அரசு தேர்வு செய்த அந்த 4 இடங்களில் நாங்கள் 2 இடங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இதில், மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். இடம் இறுதி செய்யப்பட்ட பின்னர், சென்னையின் 2-வது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.” என்று கூறினார்.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் கூறிய தகவலின்படி, சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.