தஞ்சை பெரியகோவிலில் இன்று காலை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தஞ்சாவூர் :

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது.

தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தஞ்சை பெரியகோவில் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 18 நாட்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

இதற்காக நான்கு ராஜ வீதிகளிலும் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் பெரியகோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவிலிலிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அவற்றிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து சித்திரைத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது.

இன்று மாலை சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவில் தினமும் காலையில் பல்லக்கும், மாலையில் வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. 16-ந்தேதி மாலையில் கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா முடிவடைகிறது.

இன்று நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கிருஷ்ணன், நிர்வாக அதிகாரி மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்கலாம்…
அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோவில்- கோயம்புத்தூர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.