பிம்ஸ்டெக்கின் அமைச்சர்கள் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 18வது அமைச்சர் கூட்டம் 2022 மார்ச் 29ஆந் திகதி பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் தலைமையில் கலப்பு முறையில் நடைபெற்றது.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற அதே வேளை, மியன்மார் வெளியுறவு அமைச்சர் இணைய வழியில் பங்கேற்றார்.

IMG 3006கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்து சமுத்திரத்தின் மத்தியில் உள்ள இலங்கையின் புவிசார் மூலோபாய அமைவிடம் பல நூற்றாண்டுகளாக பலதரப்பட்ட நாடுகளையும், மற்றும் வணிகர்கள், கடலோடிகள், மத மிஷனரிகள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பல்தரப்பட்ட மக்களையும் வெகு தொலைவில் இருந்தும் அண்மையிலிருந்தும் ஈர்க்கும் ஒரு காந்தமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். பிம்ஸ்டெக் அமைப்பின் அனுசரணையில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகளை கொழும்பில் ஒன்றிணைத்து இந்த இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான பாலமாக செயற்படுவதற்கான அமைப்பை இலங்கை வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடுகளுக்கிடையே அதிகமான பொருளாதார ஒத்துழைப்பிற்காக பிம்ஸ்டெக்கிற்குள் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்தார். உலகப் பொருளாதார வளர்ச்சியின் பாதை ஆசியாவை நோக்கி நகர்வதால், பிம்ஸ்டெக் நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூறுகள் புத்துயிர் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பிராந்தியத்தில் உள்ள தனியார் துறைகளின் பங்கேற்பு மற்றும் வலையமைப்பானது இந்த நோக்கத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும், ஒரு வலுவான மற்றும் ஆற்றல்மிக்க தனியார் துறை வலையமைப்பைக் கட்டியெழுப்புவதில் இந்த அமைப்பு முன்னணியில் இருக்க வேண்டிய அதே வேளையில், வர்த்தகம் மற்றும் முதலீட்டின் ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்தப் பிராந்தியத்தில் உள்ள தனியார் துறைகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

IMG 3120இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை தாங்கிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைச்சர் தாரக பாலசூரிய, உலகின் பொருளாதார மையமானது ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த மாற்றத்தினால் நுகர்வு முறைகள் எப்பொழுதும் மாறிவருவதுடன், உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய நாடுகளின் குழுவுடன் பிம்ஸ்டெக் விளங்குகின்றது எனக் குறிப்பிட்டார். இந்தக் குழுவின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில், இலங்கையில் உச்சிமாநாட்டை நடாத்துவதற்கும், இந்த முக்கியமான குழுவின் பயணத்தை உறுதியான முடிவை நோக்கி நகர்த்துவதற்கும் இந்த வாய்ப்பு நாட்டிற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என அவர் குறிப்பிட்டார்.

பிம்ஸ்டெக்கானது செழிப்பு மற்றும் அமைதிக்கான துடிப்பான தளம் என்பதை இந்த சந்திப்பில் ஒப்புக்கொண்ட வெளியுறவு அமைச்சர்கள், வர்த்தகம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான பிம்ஸ்டெக்கின் பணிகள், நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதற்கான ஒரு வழியாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்தினர். விவசாயம், உணவுப் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிம்ஸ்டெக் செயலகத்தை அமைச்சர்கள் மேலும் ஊக்குவித்தனர்.

பிம்ஸ்டெக் குழுவின் தலைவராக இருந்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்த இலங்கை, பிம்ஸ்டெக்கின் தலைமைப் பதவியை தாய்லாந்திற்கு சம்பிரதாயபூர்வமாக கையளித்தது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 மார்ச் 29

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.