வெற்றி பெற்ற பிறகு தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட திமுக.. விஜயகாந்த் குற்றச்சாட்டு.!!

மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது, ஆனால் வெற்றி பெற்ற பிறகு அது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டணத்தைக் கணக்கிட்டு தொகையை வசூல் செய்வதில் பல்வேறு குழப்பங்களும், பொதுமக்களிடம் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன.

 வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் கட்டணம் செலுத்துகிறோமோ என்ற அச்சமும், மின் வாரியம் பயனீட்டாளர்களை ஏமாற்றுகிறது என்ற உணர்வும் பொதுமக்களிடம் பரவலாக உள்ளது.  கடந்த அதிமுக  ஆட்சியில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூல் செய்தனர். இதனால் 200 யூனிட் மற்றும் 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு, மின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்ததால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  

அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என அதிமுகவும், திமுகவும் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது திமுக.

மின்கட்டண சுமை குறையும் என எதிர்பார்த்திருந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, தமிழக மக்களின் நலன் கருதி மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீட்டு முறையை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.   மேலும் மின் வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 2019ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வினை உடனே தொழிற்சங்கங்களை அழைத்து பேசித் தீர்க்க வேண்டும்.

 கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் மின் உபயோகம் அதிகமாகும். இதனால் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் உற்பத்தியை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.