கேள்வி எழுப்பிய மீடியா; கேமராவை தள்ளிவிட்ட அமைச்சர்: ராஜ கண்ணப்பனை துரத்தும் சர்ச்சை

போக்குவரத்துத் துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜனுக்கு எதிராக லஞ்ச புகாரில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டபோது செய்தியாளரின் கேமராவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தட்டிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக போக்குவரத்து துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்தது. அந்த சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வரவு செலவு கணக்கு டைரி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் எழிலகம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், துணை ஆணையர் நடராஜன் மற்றும் பணம் சரிபார்க்கும் அவரது உதவியாளர் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

போக்குவரத்து துறை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை நடராஜன் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அந்த சோதனையை நடத்தியது. தொடர்ந்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகின.

ஆனால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் சென்னையில் போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வரும் நடராஜன் திருநெல்வேலிக்கு மாற்றி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் டைம்ஸ் நவ் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவரது அருகில் இருந்த கேமராவை அவர் தட்டி விட்டார். இது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜ கண்ணப்பனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று டைம்ஸ் நவ் டுவிட்டரில் ஹாஷ் டாக் பதிவிட்டுள்ளது.

பாஜக கண்டனம்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளரின் கேமராவை தட்டிவிட்டச் சம்பவத்துக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் மீது இ.டி கேஸ்… தேவைப்படும்போது தி.மு.க-வில் பாதிபேர் உள்ளே இருப்பார்கள்: அண்ணாமலை பதிலடி

இலாகா மாற்றம்

தமிழக அரசில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், போக்குவரத்து துறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் பதவி வகித்து வந்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சிவசங்கர் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருவரும் பரஸ்பரம் இந்த அமைச்சகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதி பெயரை சொல்லி ஒருமையில் பேசியதாக எழுந்த புகார் சர்ச்சையான நிலையில், தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிவித்தது.

இந்த நிலையில் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு மற்றொரு தலைவலியாக செய்தியாளர் கேமராவை தட்டிவிட்டச் சம்பவம் வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.