உடைந்த மனங்களின் கதை…. ஓர் உன்னத உலக சினிமா! #DriveMyCar

எவ்வளவு நெருக்கமான உறவில் இருந்தாலும் பரஸ்பரம் தனிமையிலும், பகிர முடியாத ரகசியங்கள், துயரங்களுடன் தான் மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படியான புரிதலுடன் கூடிய பெருமூச்சுணர்வு, ‘டிரைவ் மை கார்’ திரைப்படத்தைப் பார்த்து முடிப்பவர்கள் எல்லாருக்கும் ஏற்படும்.

சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் புனைவுகள் வாசிப்பவர்களுக்கு அறிமுகமான ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முராகமியின் சிறுகதையை விரிவுபடுத்தி ரியுசுகே ஹமாகுச்சி இயக்கியிருக்கும் திரைப்படம் இது. சிறந்த அயல்நாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற ‘ட்ரைவ் மை கார்’ அதற்கு முன்னரே உலக சினிமா ஆர்வலர்களின் ஏகமனதான ஆதரவைப் பெற்றது. திரைப்படத்தின் தலைப்பே சொல்வதற்கு ஏற்ப, நாயகன் பயன்படுத்தும் சிகப்பு கார் படத்தின் இறுதியில் மறக்க முடியாத கதாபாத்திரமாகிவிடுகிறது.

‘Road Film’ என்ற வகைமையில் வரும் இந்தப் படைப்பு ஜப்பானுக்குள் ஒரு நீண்ட நெடுஞ்சாலை வழியில் பயணித்து வந்ததைப் போன்ற அனுபவத்தைத் தரக்கூடியது. படத்தின் நாயகனான யுசுகே வெற்றிகரமான நாடக இயக்குனர் மற்றும் நடிகன். ஆந்தன் செகாவின் ‘அங்கிள் வான்யா’ கதையை நாடகமாக்கும் முயற்சியில் இருப்பவன். அவனது மனைவி ஓட்டோ, சிறுகதை எழுத்தாளராகவும் தொலைக்காட்சி நாடக எழுத்தாளராகவும் இருக்கிறார். அவளுக்கு விசித்திரமான ஒரு பழக்கம் உள்ளது. அவர்கள் பாலுறவு கொள்ளும்போது, சன்னதம் வந்த நிலையில் தனது கதைகளை அவனிடம் பகிர்கிறாள்.

image

மாந்திரீகத் தன்மை கொண்ட கதைகள் அவை. கணவன் யுசுகே அறியாமல் அவளுக்கு ரகசிய வாழ்க்கைகளும் இருக்கின்றன. ஒருநாள் கணவன் யுசுகே எதிர்பாராத வகையில் வீடு திரும்பும்போது மனைவியின் அந்த ரகசியத்தைக் காண்கிறான். ஆனால், மனைவியுடனான உறவில் சிக்கல் ஏற்படும் என்ற நிலையில் அந்த ரகசியத்தை யுசுகே கேட்காமலேயே கடக்கிறான். ஒருநாள் யுசுகேவின் மனைவி ஓட்டோ, சாயங்காலம் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்று சொல்லி எதையோ ஆலோசிக்க வேண்டுமென்கிறார். யுசுகே மாலை வீடு திரும்பும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஓட்டோ இறந்து கிடக்கிறார்.

வீட்டுக்குக் கொஞ்சம் சீக்கிரமே வந்திருந்தால் ஓட்டோவைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற குற்றவுணர்ச்சியுடன் யுசுகே நாட்களைக் கழிக்கிறான். ஓட்டோ இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹிரோஷிமாவில் தங்கி ‘அங்கிள் வான்யா’ நாடகத்தை இயக்கும் வாய்ப்பு யுசுகேவுக்கு கிடைக்கிறது. அங்கே யுசுகே, ஓட்டோவின் பழைய காதலர்களில் ஒருவனான இளம் நடிகன் கோஜியைச் சந்திக்கிறான்.யுசுகேவின் பிரியத்துக்குரிய ‘சாப் 900’ சிகப்புக் காரை ஓட்டுவதற்கு பெண் ஓட்டுனரான மிசாகி வாடாரியை அந்த நாடக நிறுவனம் நியமிக்கிறது. நாடக இயக்குனர் யுசுகேவின் பாதுகாப்புக்காக அந்த நிறுவனம் செய்யும் ஏற்பாடு அது. சிறுமியின் முகம் இன்னும் முழுக்க மாறாத யுவதியாக இருக்கும் மிசாகி வாடாரி, தனது அம்மாவை விபத்தொன்றில் இழந்து அது தொடர்பான குற்றவுணர்வில் இருப்பவள்; கார்ஓட்டுதலில் திறம்கொண்ட அவள் மிக அமைதியுமாக இருப்பவள்.

ஹிரோஷிமா நகரும், கடலைப் பார்த்தபடி நீளும் தனிமையான சாலைகளும் சேர யுசுகேவுக்கும் பெண் ஓட்டுனர் மிசாகிக்கும் நேசம் படிப்படியாக வளர்கிறது. மிசாகி வாடாரியின் அம்மா இறந்த வீட்டைப் பார்க்க இரவுப் பயணத்தை யுசுகேயும் வாடாரியும் மேற்கொள்கிறார்கள். நெருங்கியவர் ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அந்த மரணத்தோடேயே நாம் மிச்ச வாழ்வை வாழ்கிறோம் என்று பனிமூடிய தன் வீட்டைப் பார்த்துக் கொண்டு அவள் சொல்கிறாள். இளம் நடிகன் கோஜியுடன் அசௌகரியமாகத் தொடங்கி யுசுகேயின் உறவு சகஜம் கொள்கிறது.

image

இளம் நடிகன் கோஜி, யுசுகேயின் மனைவி ஓட்டோ குறித்த ஆழமான புரிதலை யுசுகேவுக்கு ஏற்படுத்துகிறான். ஹாருகி முராகமியின் சிறுகதை உலகத்துக்குப் பரிச்சயமானவர்களுக்கு ‘டிரைவ் மை கார்’ திரைப்படம் கூடுதல் வசீகரத்தைத் தரும். நவீன மனித இருப்பு, ஜாஸ் இசை, பாலுறவு நடத்தைகள், அவர்கள் பராமரிக்கும் ரகசியங்கள் கொண்ட வாழ்க்கைகளின் வழியாக இயக்குனர் ரியுசுகே ஹமாகுச்சி அருமையாகப் பயணித்திருக்கிறார். யுசுகே, ஓட்டோ, கோஜி, மிசாகி எல்லாருடைய வாழ்க்கைக் கதைகளும் முதலில் தனித்துவமாக, அந்தரங்கமாகத் தெரிகின்றன. பிறகு எல்லாருடைய வாழ்க்கையும் சேர்ந்து ஒரு கதையாக மாறும்போது பேரழகு கொள்கிறது.

‘ட்ரைவ் மை கார்’ திரைப்படத்தில் எழுத்தாளினியாக வரும் நாயகி ஓட்டோ கதாபாத்திரத்தில் மர்மம் நிறைந்த வசீகரத்தை நடிப்பிலும் தோற்றத்திலும் வெளிப்படுத்தும் ரீகா கரிஷிமாவும் தாயை இழந்து பரிதவிக்கும் சிறுமியை தனது முகத்தில் வைத்திருக்கும் பெண் ஓட்டுனராக நடித்த டோகோ மியுராவும் குறிப்பிடத்தக்கவர்கள்.ஆஸ்கர் விருதுபெற்ற பிறகு இயக்குனர் ரியுசுகே ஹமாகுச்சி, “இந்தக் கதை இழப்பு தொடர்பிலானது. இழப்புக்குப் பிறகு எப்படி வாழ்வது என்பதையும் இந்தக் கதை கூறுவதால் எல்லாரிடமும் அதிர்வை ஏற்படுத்துவது” என்று கூறியது மிகையான கூற்றல்ல.

– ஷங்கர் ராமசுப்ரமணியன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.