‛உதிரிப்பூக்கள்' தந்தவர், ரஜினிக்கு கை கொடுத்தவர் – மகேந்திரன் எனும் படைப்பாளி

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு இயக்குனர் மகேந்திரன். ‛‛முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, பூட்டாத பூட்டுகள், மெட்டி'' என இவரது ஒவ்வொரு படைப்புகளும் ஒவ்வொரு ரகம். இவர் இயக்கிய படங்கள் குறைவு என்றாலும் அவை ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத படைப்புகள் என்றால் மிகையல்ல. இவர் மறைந்து இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் 1939ம் ஆண்டு ஜூலை 25ல் பிறந்த இவர் தனது பள்ளி படிப்பை சொந்த ஊரிலும், பின்னர் இண்டர்மீடியட் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், அதைத் தொடர்ந்து இளங்கலை பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் படித்தார்.

1958 ஆம் ஆண்டு அழகப்பா கல்லூரியின் ஆண்டு விழாவில் எம்ஜிஆர் முன்னிலையில் சினிமா என்ற தலைப்பில் இவர் பேசிய பேச்சு எம் ஜி ஆரைக் கவர்ந்திழுக்க நல்ல பேச்சு நல்ல கருத்து நகைச்சுவையுடன் கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம் சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர். வாழ்க என்று எம் ஜி ஆரின் கைப்பட எழுதி பாராட்டைப் பெற்றார்.

பின்னர் சென்னை வந்த இயக்குனர் ஆரம்பத்தில் பத்திரிக்கை ஒன்றில் வேலை பார்தார். எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று அவரது வேண்டுகோளுக்கு இணங்க பொன்னியின் செல்வன் படத்திற்கு மகேந்திரன் திரைக்கதை எழுத தொடங்கினார். மகேந்திரன் திரைக்கதை திருப்தி அளித்ததால் அதை படமாக்க எண்ணினார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அது நிகழாமலே போய்விட்டது. எம்ஜிஆரின் காஞ்சித்தலைவன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார் மகேந்திரன். அவருடன் நான்கு ஆண்டுகள் பயணித்துள்ளார்.

எம்ஜிஆர் உதவியால் இவர் எழுதிய கதையான 'நாம் மூவர்' என்ற படம் ஜம்பு இயக்கத்தில் உருவானது. இப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் இயக்குநர் மகேந்திரனின் சினிமா பயணத்திற்க்கும் வித்திட்டது. தொடர்ந்து ‛‛சபாஷ் தம்பி, பணக்காரப் பிள்ளை, நிறை குடம், திருடி, தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம், மோகம் முப்பது வருஷம், வாழந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷி மூலம்'' போன்ற படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதி வெற்றி கண்டார்.

சினிமாவில் மெல்ல முன்னேறி வந்த நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து முள்ளும் மலரும் என்ற படத்தை முதன்முதலில் இயக்கி, முதல் படத்தையே மாபெரும் ஹிட் படமாக மாற்றி வெற்றி கண்டார். தொடர்ந்து ‛‛உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, பூட்டாத பூட்டுகள், மெட்டி, கை கொடுக்கும் கை'' என பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இடம் பிடித்தார். ரஜினியின் சினிமா வளர்ச்சியில் இயக்குனர் மகேந்திரனின் பங்கு முக்கியமானது. ரஜினியை வேறு ஒரு கோணத்தில் காட்டியவர் மகேந்திரன்.

கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என்பதை தாண்டி நடிகர் விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடிப்பிலும் முத்திரை பதித்தார். சாருஹாசன், மோகன், சுஹாசினி உள்ளிட்ட பலரை, சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர் தான். இவர் இயக்கிய, நெஞ்சத்தை கிள்ளாதே படம், மூன்று தேசிய விருதுகளை பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.