சென்னையில் இருந்து மும்பை, டெல்லி செல்ல விமான கட்டணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

ஆலந்தூர்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தற்போது சர்வதேச நாடுகளுக்கு முழுமையான அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் உள்நாட்டுக்குள் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக சென்னையில் இருந்து மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளுக்கு செல்ல விமான கட்டணம் ரூ.10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததை விட விமான கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல இதற்கு முன்பு வழக்கமான கட்டணம் ரூ.8,200 ஆகும். ஆனால் ஏப்ரல் மாதம் மத்தியில் சென்னையில் இருந்து டெல்லிக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு கட்டணம் ரூ.8,200-ல் இருந்து ரூ.11 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அதேபோல சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல ரூ.7,400 ஆக இருந்த கட்டணம் ரூ.8,500 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூர் செல்வதற்கான கட்டணம் ரூ.4,600-ல் இருந்து ரூ.5,500 ஆகவும், ஐதராபாத் செல்வதற்கான கட்டணம் ரூ.5,600-ல் இருந்து ரூ.6000 ஆகவும், கொல்கத்தா செல்வதற்கான கட்டணம் ரூ.6,500-ல் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், ஸ்ரீநகர் செல்வதற்கான கட்டணம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. கோவா செல்வதற்கான கட்டணம் ரூ.14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘தற்போது வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருவதால் சென்னையில் இருந்து மும்பை, டெல்லி விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே முதல் வகுப்பு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் டிக்கெட் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது’ என்றார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் இணைப்பு விமானமாக மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்றே பயணிக்கின்றனர்.

இதன்காரணமாக டெல்லி, மும்பைக்கு அதிக பயணிகள் செல்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு தினமும் 20 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களே பயணிக்கிறார்கள். தினமும் 40 ஆயிரம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்கிறார்கள்.

மேலும் சுற்றுலாத்துறை கோடைகாலத்தையொட்டி கோவா, ஒடிசா, கர்நாடகா, இமாச்சலபிரதேசம், ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு சுற்றுலா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது’.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.