டெல்லியில் பிரமாண்ட தி.மு.க. அலுவலகம்- மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை:

அறிவாலயம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது சென்னை அண்ணா சாலையில் உள்ள தி.மு.க.வின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம் தான்.

ஒரு கட்சி அலுவலகம் எப்படி அமைய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதுதான் அண்ணா அறிவாலயம். அதேபோல் ஒரு அறிவாலய கட்டிடம் டெல்லியிலும் தற்போது கம்பீரமாக கட்டப்பட்டு உள்ளது.

பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் தி.மு.க. கட்சிக்கு அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.

அந்த இடத்தில் 3 தளங்களுடன் கூடிய பிரமாண்ட அறிவாலய கட்டிடம் அழகாக கட்டப்பட்டுள்ளது. உயரமான 4 தூண்களை கொண்ட முகப்பு, நுழைவாயிலில் அண்ணா- கலைஞர் இருவரது மார்பளவு சிலைகள், கட்சி நிர்வாகிகள் ஆலோசிப்பதற்கான இடம், தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கான அறைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பிரமாண்ட நூலகம், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கான அறைகள் என விசாலமான வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்துக்கு அண்ணா-கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவாலய கட்டிட திறப்புவிழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா- கலைஞர் அறிவாலயம் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் இந்த கட்டிடத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மார்பளவு சிலைகளையும் அவர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு கட்டிடத்தின் உள்ளே சென்று ஒவ்வொரு மாடி அறைகளை பார்வையிடுகிறார்.

விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள் எம்.பி.க்கள் தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

திறப்பு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகவே டெல்லி சென்றுவிட்டார். அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் அறிவாலயத்தை திறந்து வைப்பதற்காக மாலை 4 மணிக்கு காரில் புறப்படுகிறார்.

அவருக்கு கட்சி நிர்வாகிகள் வழிநெடுக 15 இடங்களில் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், தலைமை கழக நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் நேற்றே டெல்லி சென்று உள்ளனர்.

திறப்பு விழா நிகழ்ச்சியை அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் பக்கத்திலேயே பெரிய அளவில் ஷாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க எல்.இ.டி. ஸ்கிரீன் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்காக தி.மு.க. தலைமை கழகம் கண்கவரும் வண்ணம் அழைப்பிதழை தயாரித்துள்ளது. அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவால் 1949-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் அரை நூற்றாண்டு காலம் வளர்த்தெடுக்கப்பட்டதே தனிப்பெரும் இயக்கமாம் திராவிட முன்னேற்ற கழகம்.

இந்திய பாராளுமன்றத்தில் 3-வது பெரிய அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றுத்தந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லியில் கழகத்துக்கான புதிய அலுவலகம் ஒன்றை உருவாக்கி தந்துள்ளார்.

அண்ணா-கலைஞர் அறிவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இதன் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் பங்கெடுத்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வாறு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.