`பண பேரம்; சொகுசு வசதி' – டிஜிபி-க்குப் புகார் கடிதம் எழுதிய ஊழியர் -விருதுநகர் கிளைச் சிறை சர்ச்சை!

`பணம் கொடுத்தால் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் சிறையில் அனைத்து வசதிகளும் கிடைக்கும். இதன் மூலம் சிறை ஊழியர்கள் சிலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். நடிகர் விக்னேஷ் உட்பட பலரிடம் பலகோடி ரூபாய் இரிடிய மோசடி செய்த ராம்பிரபு என்ற கைதிக்கு விருதுநகர் கிளைச்சிறையில் பல லட்சம் ரூபாய்க்கு பெற்றுக்கொண்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர்’ என்ற பகீர் குற்றச்சாட்டுகளுடன் டிஜிபி-க்கும், சிறைத்துறை உயரதிகாரிகளுக்கும் சிறை ஊழியர் ஒருவர் அனுப்பியுள்ள கடிதம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கடித நகல் நமக்கும் வந்தது.

முறைகேடு

தென்மண்டலத்திலுள்ள மத்தியச் சிறை, கிளைச்சிறைகளில் முறைகேடுகள், மனித உரிமை மீறல், அதிகார மீறல், சாதிப்பாகுபாடு, ஊழல் எனப் பல புகார்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தப் புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகார் கடிதத்தில், “விருதுநகர் கிளைச்சிறையில் 200 விசாரணைக் கைதிகள் உள்ளனர். இங்கு பணியாற்றும் சிறைக்காவலர்கள் இலங்கேஸ்வரன், கடற்கரை ராஜா, மாரிமுத்து ஆகியோர் கைதிகளாக வரும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்களின் உறவினர்களிடம் பேரம் பேசி பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்தமான அசைவ உணவுகள், சிகரெட், குளிர்பானம், மொபைல் போன் என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கிறார்கள். அப்படி பெரும் தொகை கொடுக்கும் கைதிகளை, சிறையின் முன்பகுதியில் உறவினர்களிடம் நீண்டநேரம் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களின் நடவடிக்கையைக் கண்டிக்கும் சிறை அதிகாரியைப் பற்றி மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தங்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத வகையில் தப்பித்துவிடுகின்றனர்.

கடந்த ஆண்டு சிறை அலுவலர் வடிவேலுவுக்கு மது வாங்கிக்கொடுத்து, அதை வீடியோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி சஸ்பெண்ட் செய்ய வைத்தனர். சிறை அலுவலர் இல்லாததால், கைதிகளைக் காண வரும் உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் அனுமதிப்பார்கள். இவர்களுக்கு சிறையிலுள்ள விஜிலென்ஸ் தலைமைக் காவலர் மணிகண்டன் உடந்தை. கைதிகளிடம் பணம் வாங்குவதில் இவர்களுக்கும் மற்றொரு சிறைக்காவலர் அந்தோணிராஜுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் இவர்களுக்கு ஆதரவாக அப்போது இருந்த மத்திய சிறை எஸ்.பி மூலம் அந்தோணிராஜ் மீது நடவடிக்கை எடுக்கவைத்தனர். துணை சிறை அலுவலராக வந்த முனீஸ் திவாகர், இவர்களின் நடவடிக்கைகளை கண்டித்ததால், ஆண்டிப்பட்டியிலுள்ள அவர் குடும்ப பிரச்னையில் தலையிட்டு, வரதட்சணை புகாரில் வழக்கு பதிவு செய்ய வைத்து, பணிக்கு வரவிடாமல் செய்தனர். விருதுநகர் சிறை வாசல் பணியில் இருக்கும் இவர்கள், சிறை கண்காணிப்பாளருக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் பிரித்துப் படித்துவிட்டுத்தான் அலுவலகத்துக்கு அனுப்புவார்கள். இவர்கள் மீது வரும் பல புகார்களை சிறைத்துறை தலைமையகத்தில் உள்ள சார்பு ஆய்வாளர் அசோக் என்பவர் மூலம் தடுத்துவிடுகிறார்கள்.” என கடிதத்தில் பல புகார்கள் இவர்களை பற்றி உள்ளன.

புகார் கடிதம்

இது குறித்து நம்மிடம் பேசிய சிறைத்துறை ஊழியர் ஒருவர், ”விருதுநகர் கிளைச்சிறையில் இவர்கள் வைத்ததுதான் சட்டம். இவர்களின் கவனிப்பால், சிறைத்துறை உயரதிகாரிகள் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடந்த பிப்ரவரி மாதம் போக்சோ வழக்கில் வந்த நபர், பெரும் பணக்காரர் என்பது தெரிந்ததும், அவரது குடும்பத்தினரிடம் பெரிய தொகையை வாங்கிக்கொண்டு அனைத்து வசதிகளையும் செய்தனர். குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அதுபோலத்தான் கடந்த மார்ச் 8-ம் தேதி இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்பிரபுவுக்கு சிறைக்குள் சகல வசதிகளுடன் இருக்க 5 லட்ச ரூபாய் பணம் வாங்கினார்கள்.

மக்களை ஏமாற்றி சீட்டிங் செய்த அந்த ராம்பிரபு மட்டுமல்ல… சிறைக்கு வரும் ரௌடிகள், கொலைக்காரர்கள் என மோசமான நபர்கள் சிறைக்கு வந்தால், அவர்களின் பொருளாதார நிலையை தெரிந்துகொண்டு, உதவி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த தகவலை மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளர், சிறைத்துறை துணை இயக்குநருக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தளவுக்கு இவர்களின் செல்வாக்கு உள்ளது” என்றார்.

மத்திய சிறை

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உதவி ஆய்வாளர் கடற்கரை ராஜாவிடம் பேசினோம், “கைதி ராம்பிரபு, விருதுநகர் மாவட்டச் சிறையில் 4 நாள்கள் மட்டுமே எங்கள் பராமரிப்பில் இருந்தார். விருதுநகர் சிறைக்கு வருவதற்கு முன்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் 14 நாள்கள் இருந்தார். அங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அதற்குள் எங்கள் மீது புகார் சொல்கிறார்கள். கொரோனா கட்டுப்பாடுக்காக ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு கைதிகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில்தான் ராம்பிரபு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகருக்குக் கொண்டுவந்து அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றிவிட்டார்கள். நாங்கள் ராம்பிரபுவிடம் தலா 5 லட்சம் வாங்கிகொண்டு, ஹோட்டலில் இருந்து அசைவ உணவு வாங்கிக்கொடுத்து உபசரித்ததாக சொல்வது உண்மை இல்லை. ஜெயிலில் ஒரு ஷிஃப்டுக்கு 34 அலுவலர்கள் வேலை செய்கிறோம்.

ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார்கள். இதில் ஜெயிலுக்குள் ஒருவரை ஏமாற்றிவிட்டு இன்னொருவர் எந்த காரியமும் செய்ய முடியாது. ராம்பிரபு மீது போடப்பட்ட 420 கேஸில் 5 லட்ச ரூபாய் ஏமாற்றியதாகச் சொல்லித்தான் கைது செய்து சிறையில்லடைத்துள்ளனர். ஆனால், அவர் எங்கள் மூன்று பேருக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக புரளியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். எங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் கொடுப்பதற்துக்குப் பதிலாக அந்தப் பணத்தில் வழக்கையே முடித்துடலாமே. சிறையில் கைதிகளுக்கு ஏதாவது வேண்டும் என்றால், அதை முறையாக மனு போட்டு சிறை அலுவலர்கள் ஒப்புதலின் பேரில்தான் செய்வோம். விருதுநகர் மாவட்ட ஜெயில் ரொம்ப சின்னது.

இங்கே மதுரை மத்தியச் சிறை போன்ற வசதிகள் கிடையாது. அங்கே கைதிகளுக்கு ‘ஸ்பெஷல் டீ’, மெத்தை படுக்கை விரிப்பு, சாப்பாடு எல்லாம் செய்து கொடுக்க பி.சி.பி என ஒரு திட்டம் இருக்கிறது. அதன்படி யாராவது கைதி ஸ்பெஷல் கவனிப்புக்கு விருப்பப்பட்டு சிறை விதிமுறைகளின்படி பணம்கட்டி சிறப்பு வசதிகளைப் பெறலாம். ஆனால், இங்கே அது மாதிரி கிடையாது. அன்றாடம் தண்ணீருக்குக்குகூட தட்டுப்பாடாகத்தான் இருக்கிறது. ராம்பிரபு இங்கே இருந்த நாள்களில் நான் 4 டூட்டி பார்த்திருக்கிறேன். மற்ற இரண்டு பேரும் 3 டூட்டி பார்த்திருக்கிறார்கள். இந்த குறுகிய காலத்தில் எங்கள் மீது இவ்வளவு பெரிய குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. கைதிகளை பார்க்க ஆட்கள் அதிகம் வர ஆரம்பித்தாலே மதுரைக்கு மாற்றிவிடுவோம். அப்படித்தான் ராம்பிரபுவை உடனே மதுரைக்கு மாற்றினார்கள். ராம்பிரபு நிம்மதியாக மதுரைக்கு போயிட்டான். ஆனால், நாங்கள்தான் இங்கே ஒவ்வொரு விசாரணையாக எதிர்கொண்டு நொந்துகொண்டுள்ளோம். அதேபோல, எங்கள் மேலதிகாரிகள் முனீஸ்திவாகர், வடிவேலு ஆகியோர் மீது பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களை பணியிடை நீக்கம் செய்ததற்கும் நாங்கள் உடந்தையாக செயல்பட்டோம்னு குற்றம்சாட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க தவறானது. முனீஸ்திவாகர் சொந்த குடும்ப பிரச்னை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, அதிகாரி வடிவேலு பணியில் இருக்கும்போது மது அருந்திய காரணத்திற்காக, உயர் அதிகாரிகளால் நேரடியாக விசாரிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மத்திய சிறை

ஆகவே, இதில் எங்களது தலையீடு எதுவும் கிடையாது. இப்போது இந்தப் பிரச்னை பெரிதாவதற்குக் காரணம், இந்த இடத்தில் இருந்து என்னை காலி செய்துவிட்டு என் இடத்துக்கு வர ஒரு படையே காத்திருக்கிறது. அதில் யாரோ ஒருவர்தான் இந்த புகாரை அனுப்பி என்னை மனவேதனைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் அணிந்திருக்கும் சீருடை மீது சத்தியமாக சொல்கிறேன், நான் யாரிடமும் 5 பைசாகூட வாங்கவில்லை. யாருக்கும் எதுவும் செய்து கொடுத்ததும் இல்லை. இது போன்ற சமயத்தில் டிரான்ஸ்ஃபர் வந்தால், அது என் குடும்பத்தை ரொம்ப பாதிக்கும். இது போல எங்கள் மீது மொட்ட பெட்டிஷன் கொடுக்க ‘கம்யூனிட்டி’யும் காரணம் இருக்கலாம். இந்த விசாரணையின் முடிவில் எல்லா உண்மைகளும் தெரியவரும்” என்றார்.

சில நாள்களுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறையில் சிறைக்குள் கஞ்சா விற்பனை, மொபைல் போன் உதவி செய்துவந்த செந்தில்குமார், விஷ்ணுகுமார் என்ற இரு சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். மதுரை மத்தியச் சிறையில் கைதிகள் சிறுதொழிலில் செய்ய மூலப்பொருள்கள் வாங்கியது; விற்பனை செய்தது; அவர்களுக்கு ஊதியம் கொடுத்ததில், 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி ஏற்கெனவே வழக்கு தாக்கல் செய்த நிலையில், விருதுநகர் மாவட்ட சிறை பற்றிய இந்த புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முறைகேடு

விருதுநகர் சிறை விவகாரம் குறித்து மதுரையிலுள்ள சிறைத்துறை டி.ஐ.ஜி அலுவலகத்துக்கு விளக்கம் கேட்க சென்றோம். டி.ஐ.ஜி இல்லை. அதனால், கூடுதல் சிறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் நம்மிடம், “அந்த புகார் எங்களுக்கும் வந்தது. அது குறித்து டி.ஐ.ஜி விசாரணை நடத்தி வருகிறார். விருதுநகர் சிறையில் முறைகேடு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.