ஆந்திரப் பிரதேசத்தில் நாளை 13 புதிய மாவட்டங்கள் உதயம்

ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவித்துள்ளது. இந்த புதிய மாவட்டங்கள் அனைத்தும் நாளை (ஏப்ரல் 4) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, இந்த மாவட்டங்களில் பணியில் இருந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாற்றியமைத்துள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள்  மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது.

ஆந்திர மாநில அரசு, ஜனவரியில் ஏற்கனவே உள்ள 13 மாவட்டங்களில் இருந்து 26 மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு, பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை வரவேற்றது.
List of 26 districts formed in Andhra Pradesh

ஜெகன்மோகன் ரெட்டி, 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகளை பிரித்து கூடுதலாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.