ராசிபுரம் அருகே காதலிப்பது குறித்து அக்கம் பக்கத்தினர் தவறாக பேசியதால் கடிதம் எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் நரிகள் கரடு பகுதியைச் சேர்ந்த ராஜு – செல்லம்மாள் தம்பதியரின் மகள் அஞ்சலை (19). கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த இவர், தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சூர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இது இரு வீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து பெண் கேட்டுள்ளனர். அப்போது ஆறு மாதத்திற்குப் பிறகு திருமணம் செய்து வைப்பதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் மாணவி காதலிப்பது குறித்து அக்கம்பக்கத்தினர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஞ்சலை, ’என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என்னுடைய சூர்யாவை தண்டிக்கக் கூடாது. நான் உண்மையானவள். பெற்றோர்கள் தான் முக்கியம் என நினைப்பவள். அக்கம் பக்கத்தில் என்னை தவறாக கூறியது போல் நான் கிடையாது. நான் நல்லவள்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிதனர். துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வெண்ணந்தூர் காவல்துறையினர் கிணற்றில் இருந்து அஞ்சலையை சடலமாக மீட்டுள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
