ஆந்திராவில் உருவாக்கப்பட்ட 13 புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர், எஸ்பி நியமனம்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. இவற்றை பிரித்து புதிதாக 13  மாவட்டங்களை கடும் எதிர்ப்புக்கு இடையே முதல்வர் ஜெகன் மோகன் உருவாக்கினார். இதனால், இந்த மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 51 ஆக இருந்த வருவாய் கோட்டங்கள் 73ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, புதிதாக உருவான மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சித்தூர் கலெக்டர் ஹரிநாராயணன் அங்கேயே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்டமான திருப்பதி மாவட்ட கலெக்டராக வெங்கடரமணா நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பதி மாநகராட்சி ஆணையராக இருந்த கிரிஷா புதிதாக அமைக்கப்பட்ட அன்னமய்யா மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சித்தூர் எஸ்பியாக இருந்த செந்தில்குமார், டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற நிலையில், அவர் கர்னூல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சித்தூர் எஸ்பியாக ஒய்.ரிஷாந்த், திருப்பதி எஸ்பியாக பி.பரமேஷ்வர், திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக நரசிம்ம கிஷோர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் தங்களது பணிகளை தொடங்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.