உக்ரைனில் தன் வீட்டை நோக்கி வெடிகுண்டு வருவதைக் கண்ட தாய்: பின்னர் நடந்த பயங்கரம்


உக்ரைன் தாய் ஒருவர், ரஷ்ய வீரர்களால் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று தன் வீட்டை நோக்கி வருவதை ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறார்.

உக்ரைனிலுள்ள Dnipropetrovsk Oblast என்ற பகுதியில் அமைந்திருந்த அந்த வீடு வெடித்துச் சிதறப்போவதை உணர்ந்த Olena Selichzianowa, சட்டென இரட்டையர்களான தனது இரண்டு பையன்களையும் இழுத்து, தனக்கு அடியில் மறைத்து வைத்துக்கொண்டு முழங்காலிட்ட வண்ணம் அவர்கள் மீது கவிழ்ந்துகொண்டிருக்கிறார்.

அதற்குள் குண்டு வெடிக்க, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதற, அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது Olenaவுக்கு நினைவில்லையாம்.

மீட்புக் குழுவினர் வந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த Olenaவையும் பிள்ளைகளையும் மீட்டபோது, மூவருமே பார்க்கும் திறனை இழந்துவிட்டிருக்கிறார்கள்.

உக்ரைனில் அவர்களுக்கான சிகிச்சை செய்ய முடியாது என்பதால், அவர்களை பரிசோதித்த Dr Nataliya Preys, போலந்திலிருக்கும் தனது ஆசிரியரான பேராசிரியர் Robert Rejdakக்கு அவர்களது காயங்களைக் காட்டும் புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார்.

உடனடியாக Olenaவுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம். ஆனால், ஒரு வாரத்திற்குப் பின்னரே Olenaவும் அவரது பிள்ளைகளையும் போலந்துக்கு கொண்டு சேர்க்க முடிந்துள்ளது.

அவர்களை பரிசோதித்த பேராசிரியர் Robert, Olena தன் கண்பார்வையை முற்றிலுமாக இழந்துவிட்டதைக் கண்டறிந்திருக்கிறார். தன் பிள்ளைகளைப் பார்க்கமுடியாத Olena, அவர்களைக் கைகளால் தடவி மட்டுமே பார்க்க இயலும் நிலையில், பிள்ளைகளோ, பசி, களைப்பால், சாப்பிடுவதும், தூங்குவதும் அழுவதுமாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்.

எத்தனையோ நோயாளிகளைப் பார்த்திருந்தும், Olenaவையும் அவரது பிள்ளைகளையும் கண்ட பேராசிரியர் Robert கலங்கிப் போயிருக்கிறார்.

பின்னர் ஒரு மருத்துவராக தனது கடமைகளில் இறங்கிய அவர் உடனடியாக Olenaவுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். Olenaவின் கண்களில் ஒன்றுக்குள் கண்ணாடித்துண்டு ஒன்று நுழைந்திருந்ததால், அவரது கண்களுக்குள் பயங்கர காயம் ஏற்பட்டிருக்க, அறுவை சிகிச்சை செய்வது கடினமாக இருந்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்குப் பின் கண் விழித்த Olena, தன் பிள்ளைகளை மீண்டும் பார்க்க முடிந்ததால் மகிழ்ச்சியில் திளைத்துப்போயிருக்கிறார்.

அவரது பிள்ளைகளான Nazar மற்றும் Timurக்கும் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், Nazar ஒரு கண்ணை இழந்துவிட்டான். ஆனாலும், அவன் கொஞ்சம் வெட்கப்படும் தன் சகோதரனான Timurஐ கவனமாக பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறான்.

ஆனால், பிள்ளைகள் குண்டு வெடிப்பை நேரில் பார்த்த அதிர்ச்சி காரணமாக அவர்களால் தூங்க முடியவில்லையாம். மன நல ஆலோசகர் உதவி, மற்றும் தூக்க மருந்துகளின் உதவியால்தான் அவர்கள் தூங்குகிறார்களாம்.

இனி உக்ரைனுக்குத் திரும்பிப் போக தனக்கு விருப்பமில்லை என்று கூறும் Olenaவுக்கு, தன் பிள்ளைகளுடன் வாழ ஒரு இடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் பேராசிரியர் Robert.

அவரால் உதவி பெற்ற குடும்பம் Olena குடும்பம் மட்டுமல்ல, போலந்திலிருந்தாலும், உக்ரைனிலிருக்கும் மருத்துவர்களுக்கு தொடர்ந்து காணொளி வாயிலாக சிகிச்சைகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார் பேராசிரியர் Robert.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.