`குறைகளை கேட்டு நிவர்த்திக்கணும்!'-17 வார்டு கவுன்சிலர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கிய பேரூராட்சி தலைவி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ளது ஆறுமுகநேரி பேரூராட்சி. இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இங்கு 11 பெண் கவுன்சிலர்களும், 7 ஆண் கவுன்சிலர்களும் வெற்றி பெற்றனர். இப்பேரூராட்சியின் தலைவியாக கலாவதி கல்யாண சுந்தரமும், துணைத் தலைவராக அவரின் கணவர் கல்யாண சுந்தரமும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், 17 வார்டு கவுன்சிலர்களுக்கும் தனது சொந்தச் செலவில் ஸ்கூட்டர் (டி.வி.எஸ்- ஜூபிடர்) வாங்கிக் கொடுத்துள்ளார் கலாவதி.

பைக் சாவி வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.6 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் துவக்க விழாவில், 17 கவுன்சிலர்களுக்கும் ஸ்கூட்டர் சாவியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், மீனவர் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். சாவியைப் பெற்ற 17 கவுன்சிலர்களும் ஸ்கூட்டர்களில் பேரூராட்சி சாலையில் அணிவகுப்பாக மகிழ்ச்சியுடன் சென்றனர். பேரூராட்சியின் துணைத் தலைவர் கல்யாண சுந்தரத்தின் ஏற்பாட்டில், மாதந்தோறும் கவுன்சிலர்களுக்கு 10 லிட்டர் பெட்ரோல் வழங்குவதாக உறுதியளித்துள்ளார் கலாவதி.

பேரூராட்சியின் தலைவி கலாவதியிடம் பேசினோம், “ஆறுமுகநேரி பேரூராட்சியில உள்ள 18 வார்டுல 11 பேர் பெண்கள்தான். அவங்கள்ல ரெண்டு பேருக்கு சொந்தமா ஸ்கூட்டர் கிடையாது. சைக்கிள்லயும், நடந்தும்தான் வார்டுக்குள்ள போறாங்க. அவங்கதான் ஸ்கூட்டர் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டாங்க. ரெண்டு கவுன்சிலருக்கு மட்டும் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தா விமர்சனமாயிடுமே, என்ன செய்யலாம்னு நானும் கணவரும் யோசிச்சோம்.

தலைவி கலாவதிக்கு சாவி வழங்கிய அனிதா ராதாகிருஷ்ணன்

மத்த சில கவுன்சிலர்களோட பைக்குகளும் பழசாத்தான் இருந்துச்சு. அதனால 18 கவுன்சிலர்களுக்கும் சேர்த்தே வாங்கிக் கொடுத்திடலாம்னு முடிவு செஞ்சோம். 18 பேர்ல ஒரு கவுன்சிலர் மட்டும் ஸ்கூட்டர் வேண்டாம்னு சொன்னதுனால, மீதமுள்ள 17 பேருக்கும் சேர்த்து ஸ்கூட்டர் வாங்கிட்டோம். அந்தந்த கவுன்சிலர்களுக்கு பிடிச்ச கலரையே தேர்வு செஞ்சிருக்கோம்.17 பைக்குக்கும் என்னோட சொந்த செலவுல முன்பணம் கட்டி அவரவர் பெயருக்கு வண்டியை ரெஜிஸ்டர் செஞ்சிட்டேன்.

மாதந்தோறும் 17 ஸ்கூட்டருக்கும் என்னோட சொந்த செலவுல தவணைத் தொகையைக் கட்டிடுவேன். தெருவிளக்குகள் சரியா எரியுதா, குப்பைத் தொட்டியில இருந்து குப்பைகள் சரியா அள்ளப்படுதா, தெருக்கள்ல உள்ள போர்டுகள்ல தண்ணீர் விடும் நேரம் எழுதிப் போடப்பட்டிருக்கான்னு தினந்தோறும் கண்காணிக்கச் சொல்லியிருக்கோம். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில வார்டுகள்ல உள்ள வீடுகள்ல ஏதாவது குறை இருக்கான்னு கேட்டு வீட்டுக்கதவு எண், வீட்டு உரிமையாளர் பெயர், செல்போன் எண்ணோட டைரியில குறிச்சு அதை நிவர்த்தி செய்யச் சொல்லியிருக்கோம்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அதே மாதிரி அந்தந்த வார்டு கவுன்சிலர்களை தொடர்பு கொள்ள வசதியா, கவுன்சிலர்களோட செல்போன் நம்பரை எல்லா வீடுகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கோம். இந்தப் பணிகளை எல்லாம் செய்ய ஒரு ஸ்கூட்டர் இருந்தாத்தானே உதவியா இருக்கும். அதனாலதான் 17 கவுன்சிலர்களுக்கும் புது ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்திருக்கோம். மாசத்துக்கு 10 லிட்டர் பெட்ரோலை என் கணவர் வழங்கிடுவார்.

ஆறுமுகநேரி பேரூராட்சி வளர்ந்து வரக்கூடிய பேரூராட்சி. அறுபடை வீடுகள்ல இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆறுமுகநேரி பக்கத்துலதான் இருக்கு. மாலை அணிந்த பக்தர்கள், பாதயாத்திரை பக்தர்கள், ஆறுமுகநேரி வழியாத்தான் திருச்செந்தூருக்குப் போகணும். பக்தர்களோட வசதிக்காகவும், இளைப்பாறவும் ஆங்காங்கே நிழற்கூடம் அமைக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்.

17 ஸ்கூட்டர்கள்

இந்தப் பேரூராட்சிக்கு உட்பட்ட 10 வார்டுகள் காயல்பட்டினம் வருவாய் கிராமத்துல இருக்கு. அவற்றை ஆறுமுகநேரி வருவாய் கிராமத்துடன் இணைக்க நடவடிக்கை எடுப்பேன், ஆறுமுகநேரியை நகராட்சியாக தரம் உயர்த்துவேன். 17 கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்ததை பல தரப்பினர் பாராட்டினாலும், சிலர் விமர்சனம் செய்யுறாங்க. மக்கள் குறை தீர்க்குறதுல தாமதம் ஏற்பட்டுடக் கூடாதுங்கிறதுதான் முக்கிய நோக்கம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.