கூண்டோடு பிடிக்க கூட்டு நடவடிக்கை அவசியம்| Dinamalar

தமிழகத்தில் கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்யும் பணிகள் தீவிரமடைந்து உள்ளதால், புதுச்சேரி எல்லைகளில் கஞ்சா விற்பனை கும்பல்கள் தஞ்சமடைந்து வருகின்றன. இரு மாநில போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கஞ்சா கும்பலை பிடிக்க முடியும்.
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க, ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை, தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் துவக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ம் தேதி முதல் தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அதிகளவில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.வரும் 27ம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கஞ்சா ஆபரேஷன் தொடர உள்ளது. அதனால், தமிழக கஞ்சா கும்பல் புதுச்சேரி எல்லை பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளது.

குறிப்பாக, கனகசெட்டிக்குளம், மதகடிப்பட்டு, திருக்கனுார், கோரிமேடு, நாவற்குளம், முள்ளோடை உள்ளிட்ட புதுச்சேரி எல்லையோர கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இவர்கள், புதுச்சேரியை சேர்ந்த ரவுடி மற்றும் கஞ்சா கும்பலுடன் கைகோர்த்துள்ளனர். இதனால் புதுச்சேரி, தமிழக மாநில எல்லை பகுதிகளில் கஞ்சா தாராளமாக புழங்குகிறது.கடந்த காலங்களில் தமிழக ரவுடிகள், புதுச்சேரி பகுதிக்குள் தஞ்சம் அடைந்து, இங்குள்ள கூட்டாளிகளுடன் கைகோர்த்து பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.அதேபோன்று புதுச்சேரி ரவுடிகள், தமிழக பகுதிகளில் தஞ்சமடைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து இரு மாநில போலீசாரும் அவ்வப்போது கூட்டம், நடத்தி ரவுடிகளை ஒடுக்கினர்.அதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கை இப்போது தேவை.

latest tamil news

கஞ்சா கும்பலை கூண்டோடு பிடிக்க, இரு மாநில போலீசார் கூட்டம் நடத்தி, ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.மாநில எல்லைகளில் தனித்தனியே செயல்பட்டால் கஞ்சா கும்பலை பிடிப்பது சாத்தியம் இல்லை.புதுச்சேரி போலீசார் துரத்தும்போது தமிழக பகுதிகளிலும், தமிழக போலீசார் பிடிக்கும்போது புதுச்சேரி பகுதிக்கும் கஞ்சா கும்பல் இடம் மாறி, தப்பித்துக் கொண்டு வருகிறது.எனவே கஞ்சா கும்பலை பிடிப்பது இரு மாநில போலீசாருக்கு சவாலாக உள்ளது.

தமிழகம், ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.அதனை தடுக்க புதுச்சேரி போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர் இருப்பினும் கஞ்சா கும்பலை கூண்டோடு பிடிக்க திணறி வருகின்றனர்.எனவே, புதுச்சேரி போலீசார், தமிழக போலீசாருடன் ஒருங்கிணைந்து தகவல்களை பரிமாறி, இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால், கஞ்சா கும்பல் கூண்டோடு சிக்கும்.அத்துடன் கஞ்சா விற்பனை சங்கிலி தொடர்பும் அறுபட்டு, புதுச்சேரி இளைஞர்கள் திசைமாறி செல்வதும் தடுக்கப்படும்.

இதற்காக இரு மாநில போலீசாரின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக,கடலுார், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் கலந்து பேசி, புதுச்சேரி டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.