சிரேஷ்ட பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் தமது 77ஆவது வயதில் காலமானார்.

மாரடைப்பு காரணமாக, காலி-பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று (04) காலை காலமானார். பேராசிரியர் சோ.சந்திரசேகரம் 1944, டிசம்பர் மாதம் பதுளையில் பிறந்தார்.

பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் ஹிரோசிமா பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர், இலங்கையின் தமிழ் கல்வித்துறைக்கு பாரிய பங்களிப்புக்களை செய்திருந்தார். தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராக பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பணியாற்றியதுடன், கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இவர் விளங்கினார். தமது எழுத்தாற்றலை, சமூக மேம்பாட்டுக்காக பயன்படுத்தினார். மும்மொழி புலமை கொண்ட பேராசிரியர் சந்திரசேகரம், முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்த பெருமை காலம் சென்ற பேராசிரியர் சோ.சந்திரசேகரத்தைச் சாரும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராகவும், பேராதனை பல்கலைகழகத்தின் போதனா ஆசிரியராகவும், இலங்கை மத்திய வங்கியின் மொழிப்பெயர்ப்பாளராகவும், ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.