பெங்களூரு பேனர் பெங்களூரு பேனர்இடம் மாற்றம்!வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடிகள்…அருகில் உள்ள அரசு பள்ளியோடு இணைக்க திட்டம்| Dinamalar

பெங்களூரு : கர்நாடகா முழுவதும் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடிகளை அருகில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்ற, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான சர்வே பணிகள் முடிவடைந்துள்ளன.கர்நாடகாவில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அங்கன்வாடியில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாக நீதிபதி வேணுகோபால கவுடா தலைமையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் பெங்களூரில் கூட்டம் நடந்தது.அப்போது அவர், வாடகை கட்டடடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கல்வித்துறையுடன் இணைந்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சர்வே நடத்தி முடித்துள்ளது.அதன்படி கர்நாடகாவில் மொத்தம் 65 ஆயிரத்து 911 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

இதில் 44 ஆயிரத்து 312 அங்கன்வாடிகளுக்கு மட்டுமே சொந்த கட்டடம் உள்ளது. மீதம் உள்ள 21,599 அங்கன்வாடி மையங்கள், வாடகை கட்டத்தில் இயங்கி வருகிறது. 38 ஆயிரத்து 646 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தமாக சமையல் அறை உள்ளது. 8,640 மையங்களுக்கு வேறு இடத்தில் சமையல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, 37 ஆயிரத்து 751 அங்கன்வாடிகளுக்கு கழிவறை வசதி உள்ளது. 8,716க்கு கழிவறை வசதியே கிடையாது என்பது, சர்வேயில் தெரிய வந்துள்ளது.இந்த சர்வே குறித்த அறிக்கையை நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதைடுத்து விரைவில் தனியார் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடிகள் அரசு பள்ளிக்கு மாற்றும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளது. ஒரு வேளை பள்ளியில் இடமிருந்தும், இடம் மாற்ற கல்வித்துறையில் எதாவது தொந்தரவு இருந்தால், அது குறித்த தகவல்களை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை தலைமை செயலளருக்கு அனுப்ப வேண்டும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் அனைத்து உதவி செயலர்களுக்கும் அனுப்பி உள்ளார்.இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது:சொந்த கட்டடம் இல்லாத அங்கன்வாடிகளை அரசு பள்ளிக்கு மாற்றுவதன் மூலம் பயன்கள் அதிகம். அங்கன்வாடிகளுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதோடு குழந்தைகள் அடுத்தடுத்த வகுப்புக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால் இந்த முடிவுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.’எங்கு குழந்தைகளுக்கு வசதிகள் உள்ளதோ, அந்த இடத்தை தேர்ந்தெடுத்து வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ‘தற்போது அரசு பள்ளிகளுக்கு மாற்றுவதன் மூலம் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.