“3 புதிய சிமெண்ட் சாலைகளைக் காணவில்லை..!" – ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பஞ்சாயத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, தோப்பு தெரு, நடுத்தெரு, தொடர்ந்தனூர் ஒட்டு தெரு என 4 தெருக்களுக்கு புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ.17,00,000 மதிப்பீட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் 2021 – 2022 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தத்தை, கோலியனூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் தெய்வசிகாமணி பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு சாலை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், 3 தெருக்களில் சிமெண்ட் சாலைகளை போடாமலே… அந்த சாலைகள் போடப்பட்டதாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், இந்த சாலைகளை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக, திட்ட மதிப்பீடு விவரங்கள் எழுதப்பட்ட சுவர் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ந்த அந்தப் பகுதி மக்கள், “காணவில்லை! காணவில்லை… கோலியனூரில் மூன்று தெரு புதிய சிமெண்ட் ரோட்டைக் காணவில்லை!” எனப் பதிவிட்டு, ஊர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி (fb) – கணேசன்

இது தொடர்பாக, கோலியனூரைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் பேசினோம். “4 சாலைகளில், ஒரே ஒரு சாலை மட்டுமே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டுவிட்டு, மீதம் உள்ள 3 சாலைகளை போடமலே, போட்டுவிட்டதாகக் கூறி 17 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். ஆனால், சாலைகளை போட்டுவிட்டதாக அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக, சம்பந்தமே இல்லாத வேறு பழைய தெருக்களில் புதிய சுவர் பதாகை வைத்து… சாலை அமைக்கப்பட வேண்டிய தெருவின் பெயரை அதில் எழுதியுள்ளனர். இதனை கண்டு சந்தேகம் அடைந்துதான் ஊராட்சி செயலாளர் ரேணுகா தேவியிடம் கேட்டோம். அவங்க உடனே, `எனக்கு தெரியாது. கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், தி.மு.க ஒன்றியச் செயலாளர் கிட்ட கேளுங்கள்’ அப்படினு சொல்லிட்டாங்க.

தி.மு.க ஒன்றியச் செயலாளர் தெய்வசிகாமணிதான், இந்த சாலைகளையே அமைக்காமல், அரசு அதிகாரிகளின் உதவியோடு இப்படி செய்திருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரை இப்போதைக்கு 3 தெருக்கள் இப்படி, தெரியாமல் எத்தனை தெருக்களை இப்படி ஏமாற்றி இருக்காங்களோ தெரியல. அதிகாரிங்க உரிய விசாரணை நடத்தினால் உண்மை தெரிய வரும்” என்றார் ஆதங்கமாக.

போஸ்டர்

இது தொடர்பாக விளக்கம் கேட்க, கோலியனூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் தெய்வசிகாமணியிடம் பேசினோம். “இது தவறான குற்றச்சாட்டு. பொறாமையின் காரணமாக இப்படி சொல்கிறார்கள். இந்த மாதிரி, அ.தி.மு.க ஆட்சியில் காலத்தில் வேண்டுமானால் நடந்தது. தி.மு.க ஆட்சியில் அப்படி ஒரு சிறு தவறு கூட நடக்க வாய்ப்பே கிடையாது. போட்ட ரோடுகளுக்கு தான் சுவர் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகள் எல்லாம் 8 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இருந்து நிதி வராததால், இன்னும் யாரும் அந்த தொகையை கூட வாங்கவில்லை. இது தான் நிலைமை. இது தவறான குற்றச்சாட்டு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.