இன்ஸ்டா க்வீன்; தளபதி ஹீரோயின்… இது 'தி ரைஸ் ஆஃப் ராஷ்மிகா'! #HBDRashmika

‘இங்கேம் இங்கேம் இங்கே காவாலே’ பாடல் மூலமாக இண்டு இடுக்கெல்லாம் ’தகதிமி… தகதிமி’ ஆட ஆரம்பித்து, ‘சாமி… சாமி’ ஆடல் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து சாமியாட வைத்துக்கொண்டிருக்கும் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று 26 ஆவது பிறந்தநாள்.

தென்னிந்திய சினிமா சந்தையில் குறைவான படங்கள் ரிலீஸாவது மட்டுமல்ல, வர்த்தக ரீதியிலும் குறைந்த மார்க்கெட்டை பிடித்திருப்பது கர்நாடக சினிமாதான். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தமிழ், தெலுங்கு, இந்தி என பலதரப்பட்ட மக்களும் வாழ்வதால் அங்கு பிறமொழி படங்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ’கன்னட மொழிப் படங்களை கர்நாடக மக்களே பார்ப்பதில்லை’ என்று மறைந்த ‘சூப்பர் ஸ்டார்’ ராஜ்குமார் போராட்டம் நடத்திய வரலாறும் உண்டு. ’லூசிஃபர்’, ’யு-டர்ன்’, ’கே.ஜி.எஃப்’ போன்ற படங்கள் கன்னட மக்களை மட்டுமல்ல பிறமொழி மக்களையும் கன்னட சினிமா மீது பார்வையைத் திருப்பின. ஆனாலும், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களின் ஆதிக்கமே கர்நாடகாவில் மேலோங்கியுள்ளது. அப்படியொரு மாநிலத்தில் இருந்துதான், பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை பேராதிக்கம் செலுத்தினார்கள் ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, லாரா தத்தா, ஜெனிலியா, ப்ரீடா பின்டோ, தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட நடிகைகள். இப்படி நீளும் பட்டியலில் ’நியூ’வாக இணைந்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. மேலே, குறிப்பிட்ட நடிகைகளின் படங்கள் பாலிவுட்டில் வெளியானபிறகுதான் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார்கள். ஆனால், ராஷ்மிகாவின் ஒரு படம்கூட இன்னும் இந்தியில் வெளியாகவில்லை. அதற்குள், ’மிஷன் மஜ்னு’, ‘குட்பை’, ‘அனிமல்’ என அடுத்தடுத்து மூன்று படங்களில் நாயகியாக விந்திச் சென்றுவிட்டார். அந்தளவுக்கு பாலிவுட் நடிகைகளையே ஓவர்டேக் செய்து பிரேக் பண்ணிக்கொண்டிருக்கிறார் ராஷ்மிகா.

image

குளிர், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அடர்த்தியான காஃபி தோட்டங்கள், ஆரஞ்சுபழத் தோட்டங்கள் படர்ந்த கர்நாடகாவின் அழகூரான கூர்க்கில் ’அழகூரில் பூத்தவளே’ வரிகளுக்கு அர்த்தமாய் 1996 ஆம் ஆண்டு பிறந்தார் ராஷ்மிகா. இவரது பெற்றோர் மதன் மந்தனா- சுமன் மந்தனா. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ராஷ்மிகா ஆரம்பக் கல்வியை விர்ஜாபேட்டிலும், உயர்நிலைக் கல்வியை மைசூரிலும் பெங்களூர் ராமையா கல்லூரியில் உளவியல், ஜர்னலிசம் மற்றும் ஆங்கில இலக்கியம் பட்டப் படிப்பை (அடேங்கப்பா!) முடித்துள்ளார். ராஷ்மிகாவின் ஒரே தங்கை ஷிமோன் மந்தனா. இத்தனைப் படிப்புகளை படித்த ராஷ்மிகாவின் இதயத்தை ஈர்த்தது என்னவோ மாடலிங்க்தான்.

கடந்த, 2014 ஆம் ஆண்டு ’க்ளீன் அண்ட் க்ளியர் ஃபேஸ்’ போட்டியில் தேர்வாகி பிராண்ட் அம்பாசிடர் ஆனார். இதனைத்தொடர்ந்து, மாடலிங்கில் ’லிங்க்’ ஆனவர், கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த மாடலிங் போட்டியில் கலந்துகொண்டபோதுதான் முதல் படமான ‘கிரிக் பார்ட்டி’ படக்குழுவின் கண்களில் பட்டு இன்று இந்தியா முழுக்க உள்ள கண்கள் பார்க்கத் துடிக்கும் நாயகியாக மிளிர்ந்துள்ளார்.

image

முதல் படம் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான ‘அஞ்சனி புத்ரா’, ‘சமாக்’ தெலுங்கில் அறிமுகமான ’சலோ’ எல்லாம் சுமார் ஹிட் படங்கள்தான். நான்கு படங்கள் வெளியாகி இருந்தாலும் ஒரேயொரு வெற்றிதான் சிக்ஸர் அடித்து உச்சத்திற்கு கொண்டுவந்தது. அதுதான், ’இன்கேம் இன்கேம் கவாலே’ என்று இளைஞர்களின் இதயத்தை ஆட்கொண்ட ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம். இப்படத்தின் மூலம் தெலுங்கின் நம்பர்-1 நடிகையானார்; மற்ற மொழி மக்களுக்கும் தெரிந்த நடிகையானார். அதிலிருந்து, எங்கும் ராஷ்மிகா கிராஃப்.

அந்த கிராஃப்பை எகிறவைப்பது கிறங்க வைக்கும் ராஷ்மிகாவின் க்யூட் எக்ஸ்பிரஷன்கள்தான். இளைஞர்களின் ஹார்ட் ஃபீட்டை எகிற வைத்தும், பெரியவர்களின் பிரஷரை குறைப்பதும் அந்த எக்ஸ்பிரஷன்கள்தான். குறிப்பாக, தனது எக்ஸ்பிரஷன்களால் வடிவேலுவுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் மீம் கன்டெண்ட் நாயகியாகவும் தெறிக்கவிடுகிறார் ராஷ்மிகா.

’நகைச்சுவை லெஜெண்ட்’ வடிவேலு எக்ஸ்பிரஷன்கள் என்றாலே நடிகர்கள் அரசியல்வாதிகளின் புகைப்படங்களைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், முதல்முறையாக ஒரு நடிகைக்கு அத்தனை எக்ஸ்பிரஷன்களையும் பொருத்திப் பார்த்தது என்றால் அது ராஷ்மிகாதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு புகைப்படங்களுடன் ராஷ்மிகாவின் எக்ஸ்பிரஷன்களைப் பொருத்தி மீம்ஸ்களாக வலம் வந்தன. அதேபோல், விஜய்யின் மெர்சல் போட்டோவுடன் ராஷ்மிகா வாயில் கைவைத்திருக்கும் மீம்ஸும் வைரல் ரகம். அந்தளவுக்கு மீம்ஸ் வெறியர்களின் பிரியமான நடிகையாகவும் புகைப்படக் கலைஞர்களின் எக்ஸ்பிரஷன் ஏஞ்சலாகவும் திகழ்கிறார்.

image

2018 ஆம் ஆண்டு வெளியான‘கீதா கோவிந்தம்’ முதல் ’தேவதாஸ்’, ‘டியர் காம்ரேட்’, ’சரிலேரு நீக்கவெரு’, ’பீஷ்மா’, கன்னடத்தில் ‘போகரு’, தமிழில் ‘சுல்தான்’, ‘புஷ்பா’ என அடுத்தடுத்து ஹிட்டுகள் ‘எக்ஸ்பிரஷன் குயின்’ ராஷ்மிகாவை பாலிவுட்டின் குயின் ஆக்கியுள்ளது. அதற்கு , முன்னதாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் ராஷ்மிகா இணைந்த ’டாப் டக்கர்’ மியூசிக் ஆல்பம் இந்தியில் டாப் டக்கரான ஹிட் அடித்துது. அந்த அறிமுகமும் ’புஷ்பா’வும் ராஷ்மிகாவை இந்தியில் அசைக்க முடியாத ‘ராக்ஸ்’மிகாவாக உருவாக்கியுள்ளது. அதுவே, ராஷ்மிகாவுக்கு தென்னிந்திய நடிகைகளில் அதிகம் ஃபாலோ செய்யும் நடிகைகளில் முதலிடத்தைப் கொடுத்துள்ளது. 30 மில்லியன் ஃபாலோயர்ஸ் பின் தொடர்கிறார்கள். அந்த எண்ணிக்கை விரைவில், விஜய் ரசிகர்கள் மூலமாக 50 மில்லியன்களைத் தொடலாம். ஏனென்றால், வம்சி பைடிபள்ளி இயக்கும்‘விஜய் 66’ படத்தின் தேவசேனாவாக அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். தென்னிந்தியா மட்டுமல்ல இந்தியாவின் ‘நம்பர் -1’ இடமும் ராஷ்மிகாவுக்கு அருகில் உள்ளது.

image

பாலிவுட்டில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட நடிகைகளில் பிரியங்கா சோப்ரா 75 மில்லியன், ஷ்ரதா கபூர் 70 மில்லியன், தீபிகா படுகோனே 65 மில்லியன், கத்ரீனா கைஃப் 62, ஆலியா பட் 61 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார்கள். ஆனால், இந்த நடிகைகள் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குமேல் சினிமாவில் இருப்பவர்கள். ராஷ்மிகா அப்படியல்ல. சினிமாவுக்கு வந்து ஏழே ஆண்டுகள்தான். இந்த ஏழே ஆண்டுகளில் ’ராஷ்மிகா தி ரைஸ்’ என்று பாராட்டும்படியான பிரம்மாண்ட எழுச்சி நாயகியாகத்தான் உயர்ந்துள்ளார். ’ஹேப்பி பர்த்டே ராஷ்மிகா’.

– வினி சர்பனா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.