இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் நேரில் பாராட்டு!

சென்னை: இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் நேரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.  இரவு பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் சாலையில் கிடந்த செல்போனை காவல் அதிகாரியிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  1. குமரன்நகர் பகுதியில் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பழைய குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினர், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி பறிமுதல். சென்னை பெருநகர காவல், R-6 குமரன்நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.எம்.சீனிவாசன், தலைமைக் காவலர் பி.கோபிநாத் (த.கா.18267) மற்றும் முதல்நிலைக் காவலர் கே.சதிஷ் (மு.நி.கா.45090) ஆகியோர் 30.03.2022 அன்று இரவு பாரிநகர், கரிகாலன் தெருவில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, நள்ளிரவு 11.45 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 நபர்களை இருசக்கர வாகனத்தை நிறுத்த சொன்னபோது, இருசக்கர வாகனத்தை திருப்பி தப்ப முயன்றபோது, மேற்படி காவல் குழுவினர் ஓடி சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது, ஒரு கத்தி வைத்திருந்ததும் தெரியவந்ததின்பேரில், கத்தியை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள், பரூக் ஷேக், வ/22, த/பெ.யூசுப், 133வது பிளாக், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, பெரும்பாக்கம் மற்றும் சாரதி, வ/19, த/பெ.பழனி, 112வது பிளாக், பெரும்பாக்கம் என்பதும், இவர்கள் வந்த இருசக்கர வாகனம் திருவான்மியூர் பகுதியில் திருடியதும், இவர்கள் சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் அர்ஜுன் என்பவரை கொலை செய்வதற்காக மேற்படி திருட்டு இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் சென்று சென்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில், நடக்கவிருந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மேலும் விசாரணையில், எதிரி பரூக் ஷேக் மீது 1 கொலை முயற்சி வழக்கு, 1 போக்சோ வழக்கு, 6 திருட்டு வழக்குகள் உட்பட சுமார் 8 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேற்படி சம்பவம் குறித்து R-6 குமரன்நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரிகள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

  1. எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு, ஆயிரம் விளக்கு பகுதியில் மேலும் ஒரு இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 3 பள்ளி மாணவர்கள் பிடிபட்டனர். 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல், F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல்நிலைக் காவலர்கள் எம்.பாலசுப்ரமணியம் (மு.நி.கா.44989) மற்றும் முத்து (மு.நி.கா.44653) என்பவர் 02.04.2022 அன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் பணிமுடித்து வீட்டிற்கு செல்லும்போது, ஆயிரம் விளக்கு, அஜிஸ் முல்லக் 1வது தெருவில் 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்துடன் சுற்றித் திரிவதை கண்டு அவர்களிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததும், 3 வாலிபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது பிடிபட்ட 3 நபர்களும் 16 மற்றும் 17 வயதுடைய 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் என்பதும், மூவரும் சேர்ந்து சற்று முன்பு R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய எல்லையில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு, ஆயிரம் விளக்கு பகுதியில் நோட்டமிட்டு, மேலும் ஒரு இருசக்கர வாகனத்தை திருடுவதற்கு முயன்றதும் தெரியவந்தது. அதன்பேரில், பிடிபட்ட 3 இளஞ்சிறார்களையும் R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்துடன் ஒப்படைத்து, உரிய சட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  1. திருவொற்றியூர் பகுதியில் சாலையில் கிடந்த செல்போனை கண்டெடுத்து, அருகிலுள்ள காவல் குழுவினரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவருக்கு பாராட்டு. திருவொற்றியூர், கலைஞர் நகரில் வசித்து வரும் சமீர் அகமது, வ/15, த/பெ.அகமதுஷா என்பவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சமீர் அகமது கடந்த 29.03.2022 அன்று காலை சுமார் 07.45 மணியளவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, திருவொற்றியூர் பஸ் டிப்போ அருகிலுள்ள சாலையில், OPPO செல்போன் இருந்ததை கண்டு எடுத்தார். அருகில் யாரும் உரிமை கோராததால், சற்று அருகில் கண்காணிப்பு பணியிலிருந்த H-8 திருவொற்றியூர் காவல் நிலைய காவல் குழுவினரிடம் ஒப்படைத்தார்.

இரவு பணியின்போது, விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, R-6குமரன் நகர், F-4 ஆயிரம் விளக்கு காவல் குழுவினர் மற்றும் சாலையில் கிடந்த செல்போனை காவல் குழுவினரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (23.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.