“என் கணவரோட சாவுக்கு காவல்துறைதான் காரணம்!" – தீக்குளித்து உயிரிழந்தவரின் மனைவி கதறல்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் சுதா. இவர் கணவர் சுதாகர். மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் இவர், தன் கணவரின் இருதய சிகிச்சை செலவுகளுக்காக , தன் சகோதரரான பிரசாந்திடம் கடன் வாங்கியிருக்கிறார். அதில் பெரும்பகுதி தொகையைச் சுதா திருப்பிக் கொடுத்துவிட்ட நிலையில், மீதி தொகையைத் தரத் தாமதமாகியிருக்கிறது. டீக்கடை நடத்தி வந்த இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, தாங்கள் வாங்கியிருந்த கடனை முழுமையாகத் திருப்பி தர முடியாத நிலையிலிருந்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த், அவர் மனைவி இருவரும் கடந்த மார்ச் 30-ம் தேதி சுதாவின் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததோடு, சுதாவையும், இதயநோயாளியான அவரின் கணவரையும் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சுதாவும், சுதாகரும் பேரளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

தம்பதி

ஆனால், இவர்கள் கொடுத்த புகாரின் மீது பேரளம் காவல்நிலையத்தினர், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், மிகுந்த மனவேதனை அடைந்த சுதாகர், மார்ச் 31-ம் தேதி பேரளம் காவல்நிலையத்தின் வாசலிலேயே தன் உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் கருகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதாகர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தன் கணவரின் மரணம் குறித்து, “ஆஸ்பத்திரியில் அவர் பட்ட வேதனையை நினைச்சா, மனசு பதறுது. உடம்புல பெரும்பகுதி வெந்துப்போயிடுச்சி. அவரு பொழைச்சி வர்றது ரொம்ப கஷ்டம்னு ஆரம்பத்துலயே டாக்டருங்க சொல்லிட்டாங்க. என்னோட கணவரோட இந்த சாவுக்கு பேரளம் போலீஸ்காரங்கதான் காரணம். நாங்க கொடுத்தப் புகாரை வாங்கி வச்சிட்டு எந்த நடவடிக்கையுமே எடுக்கலை. இதனால் மனசு வெறுத்துப்போயிதான் இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டாரு. ரெண்டு புள்ளைங்களை வச்சிக்கிட்டு நான் எப்படி சமாளிக்கப்போறேன்னு தெரியலை” என சுதா கண்ணீர் விட்டுக் கதறினார்.

தீக்குளிப்பு

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுதாவின் உறவினர்கள், “இந்த இரண்டு குழந்தைகளோட படிப்பு செலவுகளுக்கும் தமிழக அரசு ஏதாவது உதவி பண்ணனும். எந்தவித ஆதரவும் இல்லாம நிர்க்கதியாய் நிக்கிற சுதாவுக்கு, அரசு வேலை வழங்கணும். இல்லைனா, இவங்களோட எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாயிடும்” என்று கவலை தெரிவித்தார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய பேரளம் காவல்துறையினர், “மார்ச் 30-ம் தேதி இரவுதான் சுதாகர் புகார் கொடுத்தார். அடுத்தநாள் காலையில, இரண்டு தரப்பையும் அழைச்சி விசாரணை செய்ய இருந்தோம். ஆனா, பகல் சுமார் 12 மணியளவுல காவல் நிலைய வாசல் வரைக்கும் வந்த சுதாகர், உள்ளார வராமலே, வெளியிலேயே திடீர்னு தன்னோட உடல்ல மண்ணெய்யை ஊத்திக்கிட்டு தீ வச்சிக்கிட்டார். நாங்க அதிர்ச்சி அடைஞ்சிப் பதறிப்போயி தீயை அணைச்சோம். அவரோட மரணத்துக்கு நாங்க எந்த விதத்துலயும் காரணம் இல்லை” எனத் தெரிவித்தார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.