கண் சிவக்கலாம்… மண் சிவக்கலாமா?

‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்பார்கள். இரண்டும் சிவப்பாவதைத் தடுத்து விட்டால் உலகில் அமைதி நிலவும். ஏனெனில், கோபத்தில் சிவக்கின்ற கண்களுக்கு அதிக ரத்தம் போய் விடுவதாலேயோ என்னவோ, மூளை தேவையான ரத்தமின்றி உக்கிரமாக யோசித்து, ஆபத்தான முடிவுகளை அவசரமாக எடுக்க, ரத்தக் களறியில் மண்ணும் சிவக்கும் மடமை அரங்கேறி விடுகிறது. மனித சமுதாயம், போர்களின் நிகழ்வால் ஏற்படும் வேதனைகளை விளக்கமாக அறிந்திருந்தாலும், அதனைத் தடுக்கத் தவறி விடுகிறது. ‘நான்தான் சூப்பர்’ என்ற ஈகோ காரணமாகவே எப்பொழுதும் கண்ணும் மண்ணும் சிவந்து போகிறது. நாம் இதனை எழுதிக் கொண்டிருக்கையில் உக்ரைன் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது டி. வி.யில் நெருப்பில் எரிந்து கரிக்கட்டையாகக் காட்சியளிக்கும் அந்நாட்டின் நகரங்களைக் காண்கையில் மனது நோகிறது. மனிதனுக்குப் புத்தியே வராதா’ என்று, ஆற்றாமையில் அலறுகிறது நெஞ்சம். கைக் குழந்தைகளுடன் தாய்மார்கள் கண்ணீர் சிந்தியபடி பேசுவது இதயத்தைத் துளைக்கிறது.

மனதும் ஓர் இடிதாங்கிதானே! இதுபோன்ற எவ்வளவு இடிகளைத் தாங்கிக் கொண்டு இப்பிறப்பை நகர்த்த வேண்டி உள்ளது? ஆனாலும் வரலாற்றில் போர்களுக்குக் குறைவேயில்லை. பாண்டவர்கள் போர் பதினெட்டு நாட்கள் நீடித்தது. ‘இன்று போய் நாளை வா!’ என்று போர் முனையிலும் ராவணன் பால் கருணை காட்டினார் ராமர். அறுபதுகளில்’ சிங்க நாதம் கேட்குது! சீன நாகம் ஓடுது! ‘ என்ற முழக்கம் வலுத்தது. அந்த அறுபதுகளின் இறுதியில்தான்(1969)’ சிவந்த மண்’ திரைப்படமும் வெள்ளித் திரையை முத்தமிட வந்தது. அதுவும் ஓர் உரிமைப் போரைக் கருவாகக் கொண்ட, கருத்துள்ள படமே.

சிவந்த மண்

சிவாஜி, எம். ஜி. ஆர் ஆகிய இரு பெரும் தூண்களின் பலத்தில்தான் தமிழ்த்திரையுலகக் கட்டிடம் நிமிர்ந்து நின்ற காலம் அது. கல்லூரி மாணவனோ, கண்டிப்பான ஆசிரியரோ, முற்றுந் துறந்த முனிவரோ, ரிக்‌ஷாக்காரரோ, படகோட்டும் தொழில் செய்பவரோ, எந்தக் கதாநாயகப்பாத்திரம் என்றாலும், இருவருக்குமே முதலிடம். இருவரும் இல்லாத படங்கள் உண்டென்றாலும், அவை அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலவே. அப்படி இருந்த நேரத்தில்தான் எம். ஜி. ஆரை வைத்து இயக்குவதற்காக ‘ அன்று சிந்திய ரத்தம்’ என்ற படக்கதையுடன் மக்கள் திலகத்தை அணுகினார் இயக்குனர் ஶ்ரீதர். கையெழுத்தாகிப் படப் பிடிப்பும் நடந்தது. என்ன காரணத்தாலோ மக்கள் திலகம் படத்திலிருந்து விலகி விட, திரைக் கதையில் சிறு மாற்றங்களை மேற்கொண்ட இயக்குனர் நடிகர் திலகத்தை அணுக, சிவந்த மண் இந்திய மண்ணைத் தாண்டி, வெளி நாட்டு மண்ணிலும் வேகம் பிடித்தது.

தமிழகத்திலுள்ள வசந்தபுரி சமஸ்தானத்தில், போர்ச்சுகீசியர் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல, அதற்கு அங்குள்ள திவான் உதவியை நாடுகிறார்கள். பிரதிபலனாகத் திவானை மன்னராக்குவதாக வாக்களிக்க, மக்கள் எதிர்ப்பையும் மீறி திவான் உதவுகிறார். திவான், எதிர்ப்பவர்களை இரக்கமின்றிக் கொல்ல, ஆனந்தின் தந்தையும் துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார். இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்திரசேகரின் மகனான பரத், சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராகத் தேற, ஜூரிக்கில் வசிக்கும் வசந்தபுரி இளவரசி தினசரிப் பத்திரிகையில் அதனைக்கண்டு, பரத்தும் வசந்தபுரி சமஸ்தானத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து பாராட்டப்போக, பற்றிக் கொள்கிறது காதல்! இளவரசி சித்ரலேகா தன்னை ‘ வசந்தி’ என்ற சாதாரணப் பெண்ணாக அறிமுகப்படுத்திக்கொள்ள, காதல் புறாக்கள் இரண்டும் ஆல்ப்ஸ், பிரான்ஸ் என்று பறந்து திரிகின்றன. ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில், அழகிய ரைன் நதி ஓரத்தில், மாலைப் பொழுதின் சாரத்தில், மயங்கித் திரிந்து மகிழ்கின்றன அப்பறவைகள்.

இதற்கிடையே, வசந்தபுரியில் திவானை எதிர்த்து மக்கள் போராடுவது இளவரசி சித்ரலேகாவுக்குத் தெரிய வர, அவர் பரத்துடன் விமானத்தில் திரும்புகையில், இளவரசியைத் திவான் மணக்க இருப்பதாகவும், எனவே திவானே விமான நிலையம் வந்து இளவரசியைத் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்றும் கூறப்படுகிறது. விமானத்தை வேறு வழியில் திருப்ப எத்தணிக்கையில், திவானின் கையாட்கள் அதனைத் தடுக்க முயல, பரத்துக்கும் அவர்களுக்கும் நடுவில் ஃப்ளைட்டிலேயே மோதல் ஏற்பட, விமானம் நிலைதடுமாறி, உருண்டு கடலுக்குள் பாய்ந்து விடுகிறது. இளவரசியுடன் பரத்தும் இறந்து விட்டதாகச் செய்தி பரவ, உண்மையில் அவர்கள் உயிருடன் ஒரு தீவில் கரையொதுங்க, அங்குள்ள இரண்டு டாக்டர்கள் அவர்களைக் காப்பாற்றி, ரகசியமாக ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள். வசந்திதான் சித்ரலேகா என்ற வசந்தபுரி இளவரசி என்பதை பரத் அறிய, அந்த ரகசியத்தைக் காக்குமாறு இளவரசி கேட்டுக்கொள்ள, பரத்தும் அவ்வாறே செய்கிறார். ஊர் வந்த பரத்தைக் கண்டு ஆனந்த் மகிழ்ச்சிக் கூத்தாட, திவானை எதிர்க்கும் புரட்சி தொடர்கிறது. இந்நிலையில் ஆனந்த் குண்டடி பட்டு இறக்க, அச்சோகம் தாளாமல் அவரின் தாயும் இறக்க, பரத்திற்கு திவானின் மீது பெருங்கோபம் ஏற்படுகிறது. பரத் குழுவினர் ரகசியத் திட்டங்கள் மூலம் திவானை எதிர்க்கின்றனர். திவானின் கோட்டைக்கு வந்த வசந்தி, தான்தான் இளவரசி சித்ரலேகா என்று அறிவிக்க, உடனே அவளைப் பறக்கும் பலூனில் ஏற்றிக் கடத்த முயல, பரத் போராடி அவளை மீட்கிறார். இறுதியில், திவான் கொல்லப்பட, இளவரசியின் கழுத்தில் தாலி ஏறுகிறது, பரத்தின் கைகளால்.

சிவாஜி, நம்பியார், முத்துராமன், ரங்க ராவ், நாகேஷ், ஜாவர் சீதாராமன், தேங்காய் சீனிவாசன் என்று நடிகர் பட்டியல் நீள, காஞ்சனா, சச்சு, சாந்த குமாரி, டி. வி. குமுதினி என்று நடிகையர் பட்டியலும் நீளப்போகும். குருசாமியாகத் திகழ்ந்து, பல ஆண்டுகளாக ஐயப்பனின் பதினெட்டுப்படிகளைக் கடக்கும் பாக்கியம் பெற்ற நம்பியார்தான், நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகத்தின் நிரந்தர வில்லன். இப்படத்திலும் திவானாக அசத்துவார். நடிகர் திலகமும் காஞ்சனாவும் பொருத்தமான ஜோடியே. காதல், வீரம், கோபம் என்று சிவாஜிக்கு ஏகப்பட்ட சான்ஸ்கள். அசத்துவதற்குக் கேட்கவா வேண்டும். நவரசம் போல் ஒன்பது பாடல்கள்-கண்ணதாசன், விஸ்வநாதன், கூட்டணியில்! கூட்டணிக்கு வலுசேர்க்கும் உறுப்பினர்களாக டி. எம். எஸ். , சுசீலா, ஈஸ்வரி, சாய்பாபா, கோவிந்த ராஜன், சுந்தர ராஜன், வீரமணி என்று பெரும் பட்டாளம். ‘ ஒரு ராஜா ராணியிடம்’ பாடலும், ‘ பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத் தான் என எண்ண வேண்டும்’ பாடலும், ‘ சொல்லவோ சுகமான கதை சொல்லவோ’ பாடலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. சிவாஜிக்கென்று பாடுகையில் டி. எம். எஸ்ஸின் குரலில் ஒரு கம்பீரம் வந்து விடும். இருவர் குரலிலும் அவ்வளவு பெரிய ஒற்றுமையுங்கூட. கண்ணதாசன், விஸ்வநாதன் காலமது! இரண்டு பெயர்களின் முதல் எழுத்தைச் சேர்த்தாலே’ கவி’ என்று வருவதாலோ!

சிவந்த மண்

முதல் அட்டம்ப்டிலேயே ஐ. ஏ. எஸ்ஸில் முதல் இடம் பிடித்துப் பாஸ் செய்வதைப் போல, தன் முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடியவர் ஶ்ரீதர். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை எடுத்த அவர், முதல் படமானது சோகமாக முடிய வேண்டாம் என்று கருதி, ‘ தேனிலவு’ படத்தை ரிலீஸ் செய்து விட்டு அதன் பின்னரே நெஞ்சில் ஓர் ஆலயத்தை ரிலீஸ் செய்தாராம். காதலுக்கு எடுத்துக்காட்டாக அது என்றென்றும் களத்தில் நிற்கிறது. சரி. சிவந்த மண்ணில் அப்படி என்னதான் விசேஷம் என்றுதானே எண்ணுகிறீர்கள். நிறைய இருக்கிறது.

  • உச்சகட்ட நடிகர்களை விடுத்து, பிற நடிகர்களை நடிக்க வைப்பதிலேயே சிரத்தை காட்டிய ஶ்ரீதர், முதன் முதலாக எம். ஜி.ஆருக்கு எழுதி, பின்னர் சிவாஜிக்காக மாற்றங்கள் செய்யப்பட்ட கதை இது!

  • முதல் படத்தை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குள்ளாகவே எடுத்து முடித்த ஶ்ரீதர், சிவந்த மண்ணுக்காக பிரான்சு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குப் பறந்து சென்று படம் பிடித்த படம் இது!

  • சிவந்த மண்ணில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் பிரபலமானவர்கள்!

  • காதல், மோதல், சண்டை, விபத்து என்று அனைத்தையும் உள்ளடக்கிய படம் இது!

  • குடும்பக் கதைகளிலிருந்து மாறுபட்டு, வசந்த புரியின் உரிமைக்காக எடுக்கப்பட்ட, ஒரு சுதந்திரப் போராட்ட படமாகவே இதனை எடுத்தார் ஶ்ரீதர்!

  • இப்படத்தைத் தொடர்ந்தே பெரும்பாலான இயக்குனர்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த ஆரம்பித்தார்கள்!

  • விமானம் கடலுள் பாய்வது, பறக்கும் பலூனில் சண்டைக்காட்சி என்று அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே அமர்க்களப்படுத்திய படம் இது!

  • இப்படி இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்பொழுதும் ஜூரிக்கின் சாலைகளில் காரில் செல்லும்போது, சிவந்த மண் படம் மனதில் ஓடும். இந்த முறை அமெரிக்காவிலிருந்து ஜூரிக் செல்ல, போர்ச்சுக்கல் வழியாகச் செல்ல வேண்டியதாயிற்று. லிஸ்பன் நகரில் இறங்கி விமானம் மாறியபோது நமது சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற’ லிஸ்பன் தேநீர் விருந்து’ மனமெங்கும் நிழலாடியது. அதனைத் தொடர்ந்து பகலிலேயே ஜூரிக் நோக்கிப் பறக்க, பனியால் மூடப்பட்ட ஆல்ப்ஸ் மலையைக் கடக்கையில், சிவந்த மண் படமும், ‘ ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்’ வசனமுமே நெஞ்சமெங்கும் வியாபித்தது.

சிவந்த மண்

எத்தனை திரைப்படங்கள் பார்த்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே எப்பொழுதும் நம் எண்ணத்தில் நிழலாடும். அப்படிப் பட்ட ஒரு படம்தான் சிவந்த மண் என்று சொல்லவும் வேண்டுமோ?

– ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.