"கறிக் கடையை மூடுங்க".. பாஜக மேயர்கள் அதிரடி.. "எங்க கிட்ட வாங்க".. திமுக அழைப்பு!

நவராத்திரி சமயத்தில் கறிக் கடைகளை திறக்க்க கூடாது என்று தெற்கு மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சி மேயர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு பெரும் சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரு மாநகராட்சிகளின் மேயர்களும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு டெல்லி மாநகராட்சி என்று ஒரே மாநகராட்சிதான் இருந்தது. இதை 2011ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு டெல்லி மாநகராட்சி என மூன்றாக பிரித்தனர். 2012ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்தது. அதில் 3 மாநகராட்சிகளிலும் பாஜகதான் வெற்றி பெற்றது. அடுத்து 2017ல் நடந்த தேர்தலிலும் பாஜகவே வென்றது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்து சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நவராத்திரி விழாவையொட்டி சில அதிர்ச்சி முடிவுகளை தெற்கு மற்றும் கிழக்கு டெல்லி மேயர்கள் எடுத்துள்ளனர்.

நவராத்திரி காலத்தில் இரு மாநகராட்சிகளிலும் கறிக் கடைகளை திறக்கக் கூடாது என்பதுதான் அவர்கள் எடுத்துள்ள முக்கியமான முடிவு. இந்த முடிவுக்கு பெரும் அதிருப்தியும், கண்டனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து கிழக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ஷியாம் சுந்தர் அகர்வால் கூறுகையில், நவராத்திரி சமயத்தில் கறிக் கடைகளை மூட வேண்டும். இது மக்களின் கோரிக்கை. அதையே நாங்கள் உத்தரவாக பிறப்பிக்கிறோம்.

நவராத்திரி சமயத்தில் மக்கள் சாமி கும்பிட கோவிலுக்குப் போவார்கள். நவராத்திரி சமயத்தில் சமையலில் வெங்காயம், பூண்டு கூட சேர்க்க மாட்டார்கள். இந்த மாதிரி சமயத்தில் பொது வெளியில் இறைச்சிகளை வெட்டுவதும், விற்பதும் சரியாக இருக்காது. குறிப்பாக கோவில்களுக்கு அருகில்
இறைச்சிக் கடைகள்
இருந்தால் பக்தர்களின் உணர்வுகள் புண்படும். மேலும் இறைச்சியின் நாற்றமும் அவர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும்.

பல இறைச்சிக் கடைகளில் இறைச்சிக் கழிவுகளை சாலையிலேயே வீசி விடுகின்றனர். அதை நாய்கள் வந்து சாப்பிடுகின்றன. இது பார்க்கவே அறுவறுப்பாக இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை நவராத்திரி சமயத்தில் நாம் தவிர்க்க வேண்டும். எனவே பக்தர்களின் உணர்வுகளும் மனதும் புண்படாமல் இருக்க இறைச்சிக் கடைகளை நவராத்திரி சமயத்தில் மூட வேண்டும் என்றார் அவர்.

இதுகுறித்து என்டிடிவி செய்தியாளர் மேயரிடம் ஏன் இப்படி ஒரு முடிவு என்று கேட்டபோது, மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் கடைகளை மூடச் சொல்கிறோம் என்றார். இதுதொடர்பாக மக்களின் கருத்து கேட்கப்பட்டதா என்று செய்தியாளர் கேட்டபோது மேயருக்கு கோபம் வந்து விட்டது. “என்ன பிரச்சினை உங்களுக்கு.. இதில் என்ன தவறு இருக்கிறது. நவராத்திரி சமயத்தில் மட்டும்தானே கடைகளை மூடச் சொல்கிறோம். நிரந்தரமாகவோ மூடச் சொல்கிறோம் என்று கோபமாக கேட்டார்.

ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை 9 நாட்களுக்கு
நவராத்திரி விழா
கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இரு மாநகராட்சிகளிலும் 9 நாட்களுக்கு இறைச்சி விற்பனை தடைபடும் நிலைமை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு வாங்க

இந்த இறைச்சித் தடை குறித்து திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா தனது பாணியில் நக்கலடித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், டியர் டெல்லி.. வெல்கம் டூ தமிழ்நாடு. இங்கு இந்த மத பாகுபாடெல்லாம் கிடையாது என்று போட்டுள்ளார்.

ஏற்கனவே இந்துக் கோவில்களுக்கு அருகே இஸ்லாமியர்கள் கடை வைக்கக் கூடாது என்றும், வர்த்தகம் செய்யக் கூடாது என்றும் கர்நாடகத்தில் அறிவிப்பு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் நவராத்திரி சமயத்தில் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று டெல்லி
பாஜக
மேயர்கள் அறிவித்துள்ளனர். அடுத்து கோவில்களுக்கு அருகே உள்ள வீடுகளில் இறைச்சி சமைக்கக் கூடாது என்று சொல்வார்களா என்று தெரியவில்லை.

அடுத்த செய்தி”இப்படியா செய்வது.. இது தேச விரோதம்”.. நிர்மலா சீதாராமன் மீது பாயும் சு. சாமி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.